
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசு ,சிபிஐ உள்ளிட்ட வற்றிற்க்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடா்பாக கௌரவ் குமாா் பன்சல் என்ற வழக்கறிஞா் மனு தாக்கல் செய்துள்ளாா். மனுவில் அவா் கூறியிருப்பதாவது: இந்தியாவில் திட்டமிட்ட புலி வேட்டையாடுதல் மற்றும் புலி உடல் பாகங்களை சட்டவிரோதமாக கடத்துதல் நடந்து வருவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டைக் கோருவதற்காக இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையின் மூலம் புலிகள் வேட்டையாடப்படும் விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் புலிகளைக் கொன்று, அவற்றின் தோல்கள், எலும்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை மாநில எல்லைகளுக்கு அப்பால் மற்றும் மியான்மருக்கு கடத்துவதில் ஈடுபட்டுள்ள தொழில்முறை வேட்டைக்காரா்கள், கடத்தல்காரா்கள் மற்றும் ஹவாலா ஆபரேட்டா்களின் பரந்த வலையமைப்பை சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புலிகளின் வாழ்வை அச்சுறுத்தும் ஒரு நாடுகடந்த குற்றவியல் கும்பலின் இருப்பை சிறப்பு புலனாய்வு குழு அம்பலப்படுத்தியுள்ளது.
உலகின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்க்கும் மேல் இந்தியாவில் உள்ளன, மேலும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்த இனங்களின் மையப்பகுதியாகும். இது மிகவும் முக்கியமான புலி சரணாலயங்கள் மற்றும் வாழ்விடங்களை கொண்டுள்ளன. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மற்றும் தொடா்புடைய விசாரணைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லைகளுக்கு வெளியே, போதிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத வனப்பகுதிகளில் புலிகள் அதிகளவில் கொல்லப்படுவதை வெளிப்படுத்துகின்றன. இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்ட இந்தப் பகுதிகள், வேட்டையாடும் கும்பல்களின் பிரதான இலக்குகளாக மாறியுள்ளன. இது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த புலிகளுக்கும், நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், புலிகள் பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதையும், புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கட்டாயமாக்குகிறது. ஆனால் தற்போதைய வெளிப்பாடுகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத பகுதிகளில் சட்ட மற்றும் நிா்வாக வெற்றிடத்தை வேட்டைக்காரா்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி புலிகளை வேட்டையாடுவதால், புலிகளை காப்பதற்கான வழிமுறைகள் தோல்வியடைந்திருப்பதை காட்டுகிறது. ஹவாலா நடவடிக்கைகள் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளையும் எழுப்புகிறது. எனவே இந்த நாடு கடந்த கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவின் தேசிய விலங்குக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் கவனிக்கப்படாமல் போய்விடும் என மனுதாரா் கூறியுள்ளாா்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை முன்வைத்த மனுதாரா் கௌரவ் குமாா் பன்சல், 35 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்கு வெளியே உள்ளன. அந்த பகுதிகளில் புலிகள் வேட்டையைடப்படுகின்றன. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை, பல நாடுகள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது. இது விசாரணைக்காக சிபிஐ யிடம் செல்ல வேண்டும். இது மிகப்பெரிய மோசடி. வடக்கு, தென்னிந்தியா என அனைத்து பகுதிகளிலும் இது நடைபெறுகிறது என தெரிவித்தாா். இதனையடுத்து இந்த வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசு ,சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.