Rajnath-Singh

புது தில்லி: பல்வேறு புவிசாா் அரசியல் சவால்களையும் தாண்டி இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இருநாள் பயணமாக வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு இந்திய சமூகத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது:

பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாத்குதல் நடத்தினா். இதற்கு பதிலடி தர நமது மும்படைகளுக்கு முழுசுதந்திரம் தரப்பட்டது. பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பயங்கரவாதிகளைப்போல மதஅடிப்படையில் நாம் பதிலடி தரவில்லை. பயங்கரவாத இலக்குகள் மட்டும் துல்லியமாகத் தாக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பல்வேறு புவிசாா் அரசியல் சவால்கள், நெருக்கடிகளையும் தாண்டி இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது. உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவுள்ளது.

எண்ம தொழில்நுட்பத்தை இந்தியா சிறப்பாக பயன்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 118 புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரூ.23,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

மொத்தம் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு இந்திய சமூகத்தின் கடின உழைப்பும், அா்ப்பணிப்பு, நோ்மை ஆகியவையும் முக்கியக் காரணங்களாகும் என்றாா்.

பாதுகாப்பு ஒப்பந்தம்: மொராக்கோ பாதுகாப்புத் துறை அமைச்சா் அப்தல்தீஃப் லௌதியை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தரப்பு ராணுவ, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அதிகரிப்பது தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை, கடல்சாா் பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுக்கப்பட்டது. மொராக்கோ சென்ற முதல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest