
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
“ஏட்டி… குட்டியளா… அந்தாண்ட பூசரி(பூவரசு) மரம் இருக்கு… நசுக்கட்டான் சொன தண்டும்ன்னு சொன்னா கேக்குறாளுவளா…” என்று அதட்டிக் கொண்டு வந்த அப்பாயி என் அம்மாவிடம் ஏதோ சேதி சொல்ல வேண்டுமென்று சீக்கிரம் அழைத்து வரச் சொன்னார்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் என் தங்கையோடு விளையாண்டு கொண்டிருந்த நான், குதிகால் தெறிக்க புழுதியில் ஓடிச் சென்று அடுப்படியில் இருந்த என்னுடைய அம்மாவைக் அழைத்து வருவதற்குள் திண்ணைக்கு வந்து அசதியாக தூணில் சாய்ந்த அமர்ந்து கொண்டார்.
“என்னத்தே அவ்ளோ அவசரம்” என்று கேட்டுகொண்டே வந்த அம்மா அவர்கள் அருகில் உட்காருவதற்கு செல்ல..
“ஏ கணக்கப்புள்ள மவளே.. உக்காரவெல்லாம் நேரமில்ல… உந்தாத்தாருக்கு இழுத்துக்கிட்டு இருக்காம்… இப்போவோ அப்போவோன்னு பேசிக்கிறவோ… சட்டுன்னு சோத்த ஆக்கிட்டு தலய அள்ளி முடிஞ்சுகிட்டு கெளம்பிடு” என்றார் அப்பாயி.
“ம்ம்க்கும்… இதானா… நான்கூட என்னமோ ஏதோன்னு நெனச்சேன்” என்றபடி உள்ளே சென்றார் அம்மா.
“உன் நையாண்டிக்கு இதான் நேரமாக்கும்…” என்ற அப்பாயி “ஏட்டி பெரியவளே… ஒரு சொம்பு தண்ணி கொண்டாடி யாயா… இவள்ட்ட பேசி என் தொண்டத்தண்ணி போவுது” என்னைப் பார்த்து கெஞ்சலாகப் பேச நீர் கொண்டுவர உள்ளே ஓடினேன்.

என்னை ‘பொறு’ என்று கை காண்பித்து விட்டு உள்ளே சென்ற அம்மா “எங்க தாத்தாவுக்கு எமே வழுக்குப் பாரயில நின்னு தான் பாசக்கயிரு வீசும்த்தே… நீங்க வேற… அவரு எம் வளகாப்பப்போ ஆக்குன கறி சோத்த நிம்மதியா பரிமாற வுடாமல்ல பண்ணிபுட்டாரு… எம்மவளே இன்னும் ரெண்டு வருசத்துல வயசுக்கு வந்துருவா… அவளுக்கு கல்யாணம், பிரசவம் லாம் பாத்துட்டு தான் அவரு போவாரு…” என்று அடுப்படியிலருந்தே அப்பாயிக்கு கேட்கும்படி சொல்ல…
“அடி இவளே… நெசத்துக்குந்தாங்குறேன்… எப்பயும் போல இல்லையாம்… இந்த தரம் ரொம்ப சீரிசாம்… பேச்சு மூச்சே இல்லன்னுச்சு உங்க சின்னாயி. அத்தாச்சியளுக்கு போன் போட்டு ஒரு வார்த்த சொல்லிப்புடு” என்று சோகமாகவே பேசினார் அப்பாயி.
அதற்கு அம்மா “நேத்துகூட எங்கம்மா வாளமீனு கொழம்பு குடுத்துச்சாம்…. கண்ணே தெரியட்டியும் அம்புட்டு நேவா முள்ளெடுத்து தின்னாராம்…”. என்று சொல்லிக் கொண்டே அப்பாயிக்கு ஒரு சொம்பு நீராகாரம் கொண்டுவந்து திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
ஆனால் அதுவும் உண்மைதான். எனக்கெல்லாம் மீனில் முள் எடுக்க மிகவும் சிரமமாக இருக்கும் இந்த வயதிலும் கொள்ளு தாத்தா மீன் சாப்பிடுகிற விதமே தனி அழகு.
“அந்த முள்ளுதான் சிக்குச்சோ… என்னமோ.. போடி கெளம்பு சட்டுன்னு” அப்பாயி அம்மாவைச் சீண்ட அம்மா முகத்தில் புன்னகை.
“போன வாரம் ஒருநா அவர நானும் எங்க ஆயாளும் பாக்கப் போனோம். நாங்க பொங்க வக்கிறத பத்தி பேசிக்கிட்டோம் டி… எப்ப போவியலாம் ன்னு கேட்டுச்சு எங்க ஆயா… உங்க அம்மாயிகிட்ட தான்… ஆனா அதுக்கு அவரு நானும் போவலாம்ன்னு தான் பாக்குறேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. இவ வேற சலிச்சுக்குறான்னாரு உங்க அம்மாயிய பாத்து” என்று அப்பாயி சொல்ல, அம்மா அடக்கமாட்டாமல் சிரிக்க, நானும் தங்கையும் ஒன்றும் புரியாமல் விழித்தோம்.

“போகி பண்டிகைய போவியல்ன்னு சொல்லுவவோ” என்றார் அம்மா.. எங்களுக்கு அப்போது தான் அந்த கொள்ளுத் தாத்தாவின் குசும்பு புரிந்தது.
அம்மாவும் நாங்களும் கிளம்பி வர, “ஆக்குன பாத்திர பண்டமெல்லாம் மூடி வச்சுட்டு வா, நா போயி பத்து எலை அறுத்துட்டு வரேன். மாமே மச்சான்லாம் வந்தா சோத்துக்கு தட்டுகெட்டு நிக்கப்புடாது” என்று சொல்லியபடி கைகழுவும் தொட்டிக்கு அருகில் சென்றார்.
அங்கே நின்ற வாழை மரங்களை ஒவ்வொன்றாய் இலைக்காக நோட்டம் விட்டுக்கொண்டு நின்றவர் “ எதுக்கும் சிவங்கோயில்ல அவரு பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ண சொல்லச் சொல்லு உங்க மாமங்கிட்ட” என்றார் அம்மாவைப் பார்த்து.
“ஏம்மா… அர்ச்சனை பண்ணா தாத்தா சரியாகிடுவாரா” என்று கேட்ட எனக்கு அம்மாவின் நமுட்டுச் சிரிப்பு தான் பதிலாகக் கிடைத்தது.
அம்மாவும் அப்பாயியும் இலைகளை அறுத்து வைத்து கதவெல்லாம் அடைத்து பூட்டிய பிறகு தாத்தா வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.
பின் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழி முழுக்க அப்பாயி அந்த தாத்தாவைப் பற்றி பெருமை பேச, எங்கள் கதைகேட்கும் காதுகளுக்கு அந்த பயணம் விருந்தானது.
அவ்வழியே சிறு காடோன்றில் தனியே ஒரு சிலை பாவமாக வீற்றிருக்க வழக்கம் போல நான் அதனைப் பார்க்கத் திரும்பும் முன்னே என் அம்மாவின் கை என் கண்களை மறைத்து வேறு பக்கம் என் முத்தைத் திருப்பியது.
“நேரா கண்ண பாக்காத காளியம்மாளுக்கு கோவம் வரும்ன்னா கேக்குறதே இல்ல இந்த குட்டி…”என்று சற்று தூரம் நடந்தபின் அம்மா அப்பாயியிடம் கிசுகிசுக்க அதற்கு அவரும் கண்டிக்கும் முகத்தோடு “அப்பறம் ராவைக்கி தூங்கவே நடுங்கி பூசாரிகிட்ட துந்நூறு போடப் போறது” என்றார் என்னைப் பார்த்து.
எங்கூடப் படிக்கும் ரேவதியின் அப்பா தான் அந்த சாமிக்குப் பூசை பண்ணுவார். அவள் ‘அது ஒன்னும் கெட்ட சாமி இல்லடி’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள் . எனக்கு சுரம் அடிக்கும் போதெல்லாம் அவள் அப்பாவிடம் தான் துந்நூரு போடச் செல்வோம்.
அவரும் ‘ஏன் காளியம்மா கோயில் பக்கம் போனியன்னு’ சரியாகக் கேட்பார். என் கூடவே விளையாட வரும் ரேவதி ‘சாமி எங்க அப்பாட்ட எல்லாத்தையும் சொல்லிடுமாம் டி” என்பாள். என் நினைவு கலைந்தது அப்பாயியின் பேச்சில்.
“நெய்ப்பந்தம் புடிக்க எம்புட்டு பேரப்புள்ளைவ பாரு அவருக்கு… எல்லாம் டாக்கட்டரும் எஞ்சனியரும்… குடுத்து வச்ச மவராசந்தான். அவரும் தண்ணி உள்ள போனா வெள்ளக்கார தொரையாட்டம்ல இங்கிலீசு பேசுவாரு” என்று கலகலப்பாகப் பேசி சிரித்துக் கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
“இது என்னடி ஊரு சனத்துல பாதி கூடிருச்சு!!! கிட்டத்தட்ட கல்யாண சாவு மாரி தான். மூனு மவய்ங்க, அஞ்சு மவளுக. எல்லாம் பெருசா செய்வவொ” என்று அங்கிருந்த யாரோ பேசுவதைக் கேட்ட அம்மா முகம் ஏதோ போல் இருந்தது.
வாசலில் நின்ற வேப்ப மரத்துப் பூவெல்லாம் வைர மூக்குத்தியாய் தரையில் சிதறிக் கிடக்க, அந்த நிழலும் குளுகுளுவென்று இருந்தது. ஒரு பெரிய வாகை மரமும் பந்தல் போட்டாற்போல நின்றது. என்னை மாதிரி ஆறு பேர் சேர்ந்தால் தான் சுற்றி பிடிக்க முடியும். வைகாசி மாதம் என்றாலும் வெயிலே ஏறவில்லை.
“ ஊம் வெள்ள சட்ட பவுசென்ன…நீ வேட்டி கட்டும் அழகென்ன.. வெளிய தெருவ போவயில… துண்டு போடும் தினுசென்ன… ஏஏஏன் அப்போவ்…” என ஒப்பாரி சத்தம் கேட்ட திசையில் திரும்பினால் அங்கே தேம்பிக்கொண்டு அமர்ந்திருந்தார் எங்கள் அம்மாயி.
“அப்பயிலேர்ந்தே தாத்தாருக்கு மவளுவன்னா உசுரு தான். உங்கம்மாகிட்ட தான் சோறு போட சொல்லுவராம். எங்கத்தைக்கும் அதான் உங்க அம்மாயிக்கும் இவருக்கும் நெதம் கரச்சல் தான்” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வந்த அப்பாயி அம்மாயியின் மாமன் மகள்.

“ஒரு நா அத்த மூஞ்சில ரத்தம் வழிய வழிய ரோட்டுக் கரைக்கிப் போவுதுன்னு எங்க பெரியப்பாருக்கு சேதி வந்துச்சு. ஆள அனுப்பி கூட்டியார சொன்னா அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம வந்துருச்சு அத்தை. வந்ததும் வராததுமா ‘நான் போலீசுல கேஸ் குடுக்கப் போறேன். அந்த மனுசங்கூட இனி என்னால இருக்க முடியாதுண்ணே’ன்னு ஒரே அழுவ.அப்படியே மூஞ்சில அருவா கீறுன காயத்தோட போனா தான் கேசு செல்லும்னு வழிஞ்ச ரத்தத்த கூட தொடைக்க விடல.
‘நீ போயி கேசு குடுத்துட்டு வந்துருவ. மீட்க யாரு போறது? நான்தான் போவனும்’ன்னு பெரியப்பா சொன்னதும் தான் மருந்து போட ஒத்துகிச்சு. அதுக்குள்ள ‘எப்படி டா என் பொண்டாட்டிய வீட்டுக்கு விடாம இங்க கூட்டிகிட்டு வருவன்னு’ அங்க வந்து சண்ட வேற போட்டாரு உங்க தாத்தா” என்று சொல்லி முடித்த அப்பாயியை குறுகுறுவென்று பார்த்த என்னிடம் “பெரிய குட்டி என்னடி பாக்குற..” என்றார்.
“இல்ல தாத்தா பெரிய தாதாவா இருந்திருப்பாரோன்னு நெனச்சேன்” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி வாயசைத்தேன்.
வந்த சிரிப்பை மென்று கொண்டவராக விட்ட கதையைத் தொடர எண்ணி “அவரு குணத்துல தங்கம் தான். எப்போவும்ல்லாம் தண்ணி குடிக்கிறது கெடையாது. அவ்வொளுக்கு ஒத்த ஆம்புளப்புள்ள.
அஞ்சு பொண்ணு. மவனுக்கு ஏதோ நோவு வந்து சின்ன பிள்ளையிலேயே செத்துப்போச்சு. இப்போ அந்த பையன் இருந்தா என் தம்பி வயசிருக்கும். அதுக்கப்புறம் தான் தண்ணிய தொட ஆரம்பிச்சது. இருக்கிற சொத்து எல்லாம் வித்து ஆம்பள புள்ள இல்லாத சொத்து ஆத்தோட போன்னு பணத்த ஆத்து வாய்க்கால்ல வீசுவாராம். உங்க அம்மாள வெளியூருக்கு கட்டி குடுக்குறப்போ, இப்படி தண்ணிய போட்டுட்டு விழுந்து கெடந்தா வெளி ஒரமொறையில நம்மளை எப்படி மதிப்பாங்கன்னு உங்க பெரியப்பா சொன்னதுக்கு அப்புறம் தண்ணியையே விட்டுடுச்சு. அதுக்கப்புறம் தொட்டதே இல்லை”என்று கூறி பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டார்.
“ஏம்ப்பாயி… ஆம்பளப்புள்ள இல்லாட்டி காசெல்லாம் தண்ணீல விடுவோவளா… அப்போ நானும் தங்கச்சியும் மட்டும் தான இருக்கோம்”என்று நான் சற்று பயந்து கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாது அம்மாவும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க உள்ளிருந்து ‘கிரீச்’சென்ற மரம் இழுபடும் சத்தம் கேட்டது.
ரொம்ப நாட்களாக யாரும் அமராமல் இருந்த பழைய நாற்காலியை ரெண்டுபேர் தூக்கிக் வந்து திண்ணையில் போட்டார்கள். வேலு பெரியப்பா வீட்டு போன் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது. எல்லாம் தாத்தாவின் செய்தியாகத் தான் இருக்கும்.
அப்போது தான் உள்ளேயிருந்து மருத்துவர் வெளியில் வந்தார். எல்லோரும் அவரையே ஆர்வமாகப் பார்த்து கொண்டிருந்தோம். ரொம்ப சோகமாக என்ன சொல்வதென்றே தெரியாமல் கூட்டத்தில் இருந்த எல்லோர் முகத்தையும் பார்த்தவர், மாலையோடு உள்ளே வந்த நான்கு பேரிடம் “தாத்தாவுக்கு இன்னும் ஆறு மாசத்துக்கு ஒன்னும் ஆவாது. வேற எதும் நெசமாவே பிரச்சனைன்னா கூப்புடுங்க” என்று சொல்லிவிட்டு அவர் பெட்டியை தூக்கிக் கொண்டு நடையை கட்டினார்.
ரோட்டோரமாக இருந்த கள்ளிச் செடியில் மாலையப் போட்ட ஒருவர் “என்னப்பா நல்லாருக்கியா? புள்ளைங்க என்ன படிக்கிது? பாவம் அந்த மனுசனுக்கு இப்புடில்ல இழுக்குது. சிவங்கோயில்ல அர்ச்சனை பண்ண சொல்லுங்க. இல்லாட்டி தெக்கிக் கொல்ல மண்ணெடுத்து கரைச்சு வாயில ஊத்தச் சொல்லுங்க” என்றார் அம்மாவிடம்.
“நல்லாருக்கேன்ணே…சரிண்ணே சொல்றேன்” என்றவர் எங்களைப் பார்த்தபடி “பெருசு ஆறாவது சின்னது ரெண்டாவது. அத்தாச்சிய கேட்டேன்னு சொல்லுங்க” என்று புன்னகை செய்ததும் அவர் தலையசைத்துக் கடந்துவிட்டார்.
அப்போது தான் அப்பாயி முன்பு சொன்னதன் அர்த்தம் என் மூளைக்கு உரைத்தது.
இன்னும் இரண்டு பேர் அந்தண்டை இருந்த குளத்தில் மாலையை வீசீவிட்டு “நல்லெண்ண தேச்சு குளிப்பாட்ட சொல்லணும்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டபடி சென்றனர்.
நாங்கள் தாத்தாவை பார்த்து வர உள்ளே சென்றபோது “கொஞ்சம் அசதியில நல்லா தூங்கிட்டேன். அதுக்குள்ள கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிபுட்டா இவ…” என்று தன் மூத்த மகளிடம் மனைவியைப் பற்றி சொன்னவர், “உன் கை பக்குவம் எங்க ஆயா மாரியே இருக்கும். நாளைக்குப் பூவாலி மீனு கொழம்பு வச்சுத் தாரியா என் ஆயா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ரோட்டில் மீன் கார நல்லம்மா “நண்டு ராலு மீனேய்ய்ய், பண்ணா ப்பூவாலி வெள்ளப் பொடி மீனேய்ய்ய்” என்று கூவியது காதில் கேட்கவும் இதற்காகவே காத்திருந்தது போல படுத்துக் கொண்டார் தாத்தா.
“ஏஏஏஏ மீனுக் கூடேய்ய்ய்…” என்றபடி வாசலுக்கு ஓடினார் பெரியம்மாயி.
