
பெங்களூருவில் வேலையைத் துறந்து வீட்டிற்குத் திரும்பியதால், பழிக்கப்பட்ட இளைஞர், விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டு அதில், ரூ. 2.5 கோடி வருவாய் ஈட்டி வருகிறார்.
பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரியான பிரின்ஸ் சுக்லா, பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த வேலையைத் துறந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மாத ஊதியம் அளிக்கும் வேலையைத் துறந்ததால், அவரின் குடும்பத்தார் உள்பட உறவினர்கள் பலரும் அவரை தரக்குறைவாகப் பேசியுள்ளனர். ஆனால், இதனால், அவர் மனம் தளரவில்லை.
விவசாயத் துறை பட்டதாரியான சுக்லா, தனது தந்தையிடம் ரூ. 1 லட்சம் வாங்கி சொந்தமாக விவசாயத் தொழில் தொடங்கியுள்ளார்.
அக்ரேட் என்ற புத்தாக்க (ஸ்டார்ட்அப்) நிறுவனத்தைத் தொடங்கி, விவசாயிகளுக்கு தரமான விதைகள், இயற்கை உரங்கள், திறன் வாய்ந்த நீர்ப்பாசனக் கருவிகள் போன்றவற்றை வழங்கி வந்துள்ளார். அதோடு மட்டுமின்றி சிறிய அளவிலான விவசாயம் மேற்கொள்ள பயிற்சியையும் இவர் வழங்கிவந்துள்ளார்.
இது குறித்து பிரின்ஸ் சுக்லா கூறியதாவது,
”விவசாயத் துறையில் சொந்தமாகத்தொழில் தொடங்கி, ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்தேன். ஆனால், தொடர் கடின உழைப்பால், தற்போது இதில் வெற்றி அடைந்துள்ளேன். இன்று, அக்ரேட் நிறுவனம் ரூ. 2.5 கோடி ஆண்டு வருவாய் ஈட்டுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 10 கோடி.
முன்பு இருந்த விவசாய முறையில் சிக்கல்களை சந்தித்து சிரமத்திற்குள்ளான விவசாயிகள் கூட, நவீன கருவிகளாலும், சிறந்த நுட்பங்களாலும் பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.
விவசாயத்தை குடும்ப பாரமாக நினைத்த பலரும், அதனைப் பெருமையாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் வேலையைத் துறந்து வந்தபோது என்னைத் திட்டியவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். இதை, என் கடின உழைப்புக்கு கிடைத்த மரியாதையாகப் பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!