
ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வர்னிகா குண்டு சென்றுகொண்டிருந்த காரை பின்தொடர்ந்து, வழிமறித்து கடத்த முயன்றதாக விகாஸ் பராலா கைது செய்யப்பட்டார்.
ஹரியாணா மாநில பாஜக முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் பராலாவின் மகனான விகாஸ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதலில் பெண்ணைப் பின்தொடர்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து கடத்தல் முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டது.
சண்டீகர் நீதிமன்றத்தில் விகாஸ் மற்றும் ஆஷிஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகின்றன.
5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், சட்டப்படிப்புக்கான தேர்வை விகாஸ் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஹரியாணா அரசின் உதவி தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதவிக்கு 100 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், விகாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண் கடத்தல் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் அரசின் உயரிய பதவியில் நியமனம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.