odisha-student

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தீக்குளித்து, 90 சதவிகித தீக்காயங்களுடன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

கல்லூரி மாணவி ஏன் தீக்குளித்தார்? தீக்குளித்ததற்கான காரணம் என்ன? என்பதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்,  தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி திங்கள்கிழமை இரவு பரிதாபமாக பலியாகினார். அவர் ஏன் தீக்குளித்தார் என்ற விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாணவி தீக்குளித்தது ஏன்?

பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் பி.எட் 2- ஆம் ஆண்டு படித்துவந்த அந்த மாணவி, சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறைக்கு வெளியே தீக்குளித்தார்.

சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக பேராசிரியரும் கல்வித் துறைத் தலைவருமான(HOD) சமீர் குமார் சாஹு, மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாணவியை தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என்று அந்த பேராசிரியர் மிரட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தீவிர உறுப்பினரான அந்த மாணவி, முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து சாஹுவை பாதுகாத்ததாக, கல்லூரியின் முதல்வர் திலீப் கோஷை காவல் துறையினர் கைது செய்த நிலையில், மாணவி பலியானதும் சாஹுவையும் கைது செய்தனர்.

பலியான மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மாணவி தீக்குளித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள், ஆளும் பாஜக அரசைக் கண்டித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி பேராசிரியரே மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, தீக்குளித்த சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Odisha student dies after self-immolation over inaction after sexual harassment allegation

இதையும் படிக்க : கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest