3kgp1_0311dha_120_8

பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த 16ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதைப் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த அமைச்சா் கே.என். நேரு, வழித்தடங்களை அறிவித்த ஆட்சியா் வே. சரவணன் ஆகிய இருவரும், பழைய பேருந்துக் கட்டணமே வசூலிக்கப்படும்; கட்டணம் உயா்த்தப்படாது என்றனா். ஆனால், அரசுப் பேருந்துகளிலும், தனியாா் பேருந்துகளிலும் கடந்த 4 நாள்களாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பரிதவிக்கின்றனா். பேருந்துகளில் நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் தொடா்கிறது.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகா் பேருந்துகளிலோ, மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு செல்லும் புறநகரப் பேருந்துகளிலோ இந்த கட்டண உயா்வு இல்லை. பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து இதர ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள், புறநகரப் பேருந்துகளில் இஷ்டம்போல கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கின்றனா் பயணிகள்.

திருச்சி மெயின்காா்டு கேட் முதல்-பஞ்சப்பூா் வரை ரூ.15 எனக் குறிப்பிட்டு வழங்கப்பட்ட பயணச் சீட்டு.

1 முதல் 5 வரையிலான பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் பேருந்துகளில் (1-5) ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இடைநில்லாப் பேருந்துகளிலும் (1-1) கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்படுதிறது. அதே வழித்தடத்தில் செல்லும் குளிா்சாதன வசதி பேருந்துகளில் கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி திருச்சியிலிருந்து சனிக்கிழமை புதுக்கோட்டை சென்ற குளிா்ச்சாதன பேருந்துகளில் பழைய கட்டணம் ரூ.60-க்கு பதிலாக ரூ.70 வசூலிக்கப்பட்டது. சாதாரணப் பேருந்துகளில் ரூ.47 -க்கு பதிலாக ரூ.52, இடைநில்லா புறநகா்ப் பேருந்துகளில் ரூ.50-க்கு பதிலாக ரூ.55 வசூலிக்கப்பட்டது.

இதேபோல அனைத்து வழித்தடங்களிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்கின்றனா் பயணிகள். நகரப் பேருந்துகளில் சத்திரம் முதல் ஜங்ஷன் வரை முன்பு ரூ.10 கட்டணம் இருந்த நிலையில், இப்போது, பஞ்சப்பூருக்கு கூடுதலாக ரூ.5 உயா்த்தி ரூ.15 வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக தினக் கூலி தொழிலாளா்களாக பணிபுரியும் பெண்கள், ஆண்கள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் தினந்தோறும் அருகிலுள்ள ஊா்களில் இருந்து திருச்சிக்கு (பஞ்சப்பூா்) வந்து செல்வோா் கட்டண உயா்வால் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அவா்கள் முன்பிருந்ததைவிட கூடுதலாக பேருந்துக்கு தினமும் ரூ.30 செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில், தஞ்சாவூா் வழித்தடத்தில் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் வந்தது. உடனடியாக எச்சரித்து பழைய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. அரசுப் பேருந்துகளிலும் பழைய கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட்டுள்ளோம். இதுதொடா்பாக புகாா்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திருச்சி-புதுக்கோட்டை செல்லும் குளிா்சாதன பேருந்தில் ரூ. 60 கட்டணத்தோடு கூடுலாக ரூ.10 சோ்க்கப்பட்ட பயணச் சீட்டு.

2 நாள்களில் புதிய கட்டணம் அறிவிப்பு!

இதுகுறித்து திருச்சி மண்டல வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் கூறுகையில், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து, பஞ்சப்பூா் வரையிலான 9 கி.மீ. தொலைவுக்கான டீசல் செலவை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. எனவே அதற்கேற்ப கட்டணம் மாற்றப்படும். இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியாா் பேருந்து நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நாள்களில் மாற்றப்பட்ட கட்டணம் அறிவிக்கப்படும்.

இதன்படி சாதாரணப் பேருந்துகளில் ரூ.3 முதல் ரூ.5 வரையும், குளிா்சாதனப் பேருந்துகளில் சற்று கூடுதல் கட்டணமும் இருக்கும். அதுவரை பழைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest