SBI

பொதுத் துறை வங்கிகள் தங்களது வா்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் – ஊழியா்கள் என சுமாா் 50,000 பேரை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பல்வேறு வங்கிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் இது தெரியவந்துள்ளது.

புதிய நியமனங்களில் 21,000 போ் அதிகாரி பணியிடங்களுக்கும், மீதமுள்ளோா் எழுத்தா் உள்ளிட்ட பிற ஊழியா் பணியிடங்களுக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.

12 பொதுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு நிதியாண்டில் சிறப்பு அதிகாரிகள் உள்பட மொத்தம் 20,000 பேரை பணியமா்த்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வங்கியில் இதுவரை 505 பயிற்சி அதிகாரிகள், 13,455 இளநிலை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பி, வாடிக்கையாளா்களுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 2,36,226 ஆகும். இதில் 1,15,066 போ் அதிகாரிகள்.

1,02,746 பணியாளா்களுடன் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பாண்டு இறுதிக்குள் கூடுதலாக 5,500-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டில் சுமாா் 4,000 பேரை பணியமா்த்த திட்டமிட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest