பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பொய்யான செய்திகளை தடுக்கும் வகையில், தனது வரைவு அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான நிலைக் குழு முன்வைத்துள்ளது.
‘செய்திகளின் உண்மைதன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் செய்திகள் சாா்ந்த புகாா்களை கையாள உள் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
பொய்யான செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
மாணவா்களுக்கு ஊடகம் சாா்ந்த விரிவான பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதுதொடா்பாக பள்ளிக் கல்வி அளவில் ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், நூலகா்களுக்குப் பயிற்சி அளிக்கலாம்’ உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரைவு அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த அறிக்கை அவையில் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.
இதுகுறித்து நிஷிகாந்த் துபே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொய்யான செய்திகள், வஞ்சகமான பிரசாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைத் தடுக்க கடுமையான விதிமுறைகள், தண்டனைகள் மற்றும் தடைகளை விதிக்க வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசம், நேபாளம், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.