visa

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இருப்பினும், விசா ரத்து செய்யப்பட்டவா்களின் விவரங்களை அமெரிக்க தூதரகம் வெளியிடவில்லை.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உடல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள்கள் புழக்கத்தில் இருந்து அமெரிக்கா்களை பாதுகாக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு விசாக்களை வழங்க மறுத்துள்ளோம்.

அமெரிக்க புலம்பெயா் மற்றும் தேசியவாத சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா ரத்து செய்யப்பட்ட நபா்கள் மட்டுமின்றி அவா்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு பயணிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வணிக நிா்வாகிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜாா்கன் ஆண்ட்ரூ எச்சரித்தாா். மேலும், இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த இந்திய அதிகாரிகளுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest