
மும்பை: போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வுசெய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை உத்தரவிட்டது.
என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கட்-ஆஃப் நிலையில் இருந்ததே ஏா் இந்தியா ‘ஏஐ 171’ போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளாக காரணம் என அகமதாபாதில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) வெளியிட்ட முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டிஜிசிஏ இவ்வாறு உத்தரவிட்டது.
டாடா குழுமத்தின் ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம், வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்டது.
சில விநாடிகளிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 260 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.
இந்நிலையில், விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில்,‘அமெரிக்க விமான போக்குவரத்து நிா்வாகம் (எஃப்ஏஏ) வெளியிட்ட விமான பாதுகாப்பு குறித்த தகவல்கள் (எஸ்ஏஐபி) என்ற அறிக்கையின்படி போயிங் 787, 737 ரக விமானங்களில் சா்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை சில நிறுவனங்கள் ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டன. இந்த விமானங்களையுடைய அனைத்து விமான நிறுவனங்களும் வரும் ஜூலை 21-ஆம் தேதிக்குள் மேற்கூறிய ஆய்வை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆய்வு நிறைவடைந்த பின்பு அதுகுறித்த முழுமையான அறிக்கையை டிஜிசிஏ பிராந்திய அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாஸா ஏா், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களிடம் 150-க்கும் மேற்பட்ட போயிங் 787, 737 ரக விமானங்கள் உள்ளன.
787, 737 ரக விமானங்கள் உள்பட போயிங் நிறுவனத்தின் சில விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கட்-ஆஃப் ஆக வாய்ப்பிருப்பதாக கடந்த 2018-இல் எஃப்ஏஏ வெளியிட்ட எஸ்ஏஐபி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.