
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது.
அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “காதலிப்பவர்களை சாதி பார்த்து ஆவணக் கொலை செய்பவர்கள் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவன் பிறப்பினால் உயர்ந்தவன் அல்ல, அனைத்தும் சமுதாய சீர்கேடுகளையும் செய்பவனை பிறப்பால் உயர்ந்தவன் என்று எப்படி கருத முடியும். அண்ணல் அம்பேத்கர் போல் இங்கு யாரும் உயர்ந்தவர் இல்லை. கல்வி, அறிவு, நேர்மை ஆகிய செயல்களைச் செய்பவனே உயர்ந்தவன். ஒருவனை சாதியில் உயர்ந்தவன் என்று கருத முடியாது.

சாதிக்காக கொலை செய்யாதே; சாதியை கொலை செய்!
கவின் படித்து கற்றுத் தேர்ந்தவன் நல்ல பணியில் இருந்திருக்கிறான், நல்ல குணத்தையும் கொண்டிருந்திருக்கிறான். இதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர அவன் எந்த சாதியை சேர்ந்தவன் என பார்க்கக் கூடாது. இப்படி மாதம் ஒரு கொலையைச் செய்து சிறைக்குச் செல்கின்ற ஒரு சம்பவம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதிச் சண்டைகளை பெருகிப் போகின்ற நிலையில் சாதிக்காக கொலை செய்யாதே. சாதியை கொலை செய். சாதிக்காக கொலை செய்யப்படும் இடங்களில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் நிற்கிறது. சாதிய வாக்குகள் நமக்கு வராமல் போய்விடும் என ஓட்டுக்காக நிற்கும் அரசிடம் நாட்டை கொடுத்தால் நாடு எப்படி முன்னேறும்.
தமிழகத்தில் மேய்ச்சல் புறம்போக்கு நீக்க கூடாத புறம்போக்கு என எதுவுமே இல்லை. கடைசியாக இருந்த மலையடிவாரத்தில் கூட எங்கள் ஆடு மாடுகளை மேய்க்க கூடாது எனத் தடுப்பது அறமா?. உழவர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளிகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உழவிற்கும், நெசவுத் தொழிலுக்கும், சீமானுக்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு, உணவும், உடையும் பயன்படுத்தும் அனைவருக்குமே இவர்களுடன் சம்பந்தம் இருக்கிறது.
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என கூறப்படுகிறது. ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 14,000 பேர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதுவா தமிழக வளர்ச்சி? தூய்மை தொழிலாளர்கள் 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை அழைத்து பேசுவதற்கு இங்கு ஒரு அதிகாரிகள் கூட இல்லையா?. இதுவா வளர்ச்சி?. ஒரு பக்கம் நெசவாளர் போராட்டம், ஒருபக்கம் உழவர் போராட்டம். எதுல வளர்ச்சினு கேட்டா பதில் இருக்கா?

ஒரு துறையில் 3100 வேலைக்கு 13 லட்சம் பேர் பரீட்சை எழுதுகிறார்கள். 13 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பது தான் வளர்ந்த நாடா?. வளர்ந்த நாட்டில் பால் விலை, நூல் விலை, மின்கட்டணம் எப்படி உயர்ந்துச்சு? அரசு சாமானியர்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் அதை இப்படி மேடை போட்டு கேள்வி கேட்போம்” என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88