
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 21 ஆவது முறையாக கூறியுள்ள நிலையில் பிரதமர் மோடி எப்போது மௌனம் கலைப்பார்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு -காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 4 நாள் தாக்குதலுக்குப் பிறகு போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் மோடி பதில் பேசாமல் அமைதியாக இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 21-வது முறையாக கூறியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“அணு ஆயுதப் போராக மாறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் 4 நாள் போரை நிறுத்தினேன் என்று கடந்த 59 நாள்களில் குறைந்தது 21 ஆவது முறையாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
போரை நிறுத்துங்கள் அல்லது அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை இழப்பீர்கள் என தான் கூறியதாகவும் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் டிரம்ப்.
டிரம்ப் விவகாரத்தில் எப்போது மௌனம் கலைப்பீர்கள் பிரதமரே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.