IMG-20220828-WA0020

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓபிஎஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியரை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்க கல்வி மிகவும் அவசியம் என்பதன் அடிப்படையில் கட்டணமில்லாக் கல்வி தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்
ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை மாணவ, மாணவியர் பயில ஏதுவாக, மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ப’ வடிவிலான அல்லது ‘யு’ வடிவிலான இருக்கைகள் கொண்ட வகுப்பறைகளை தென் மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசும் சமீபத்தில் பிறப்பித்துள்ளது.

வகுப்பறைகளில் கடைசி இருக்கை என்கிற கோட்பாட்டினை ஒழிக்கும் வகையிலும், மாணவ மாணவியரிடையே சம வாய்ப்பினை அளிக்கும் பொருட்டும் ‘ப’ வடிவிலான இருக்கை திட்டத்தை தமிழ்நாடு கொண்டு வந்திருக்கிறது என்றாலும், இதில் உள்ள பாதக அம்சங்களை ஆராய்வது அரசாங்கத்தின் கடமை.

‘ப’ வடிவிலான இருக்கைகள் அமைக்கப்படுவதன் காரணமாக மாணவ, மாணவியர் கழுத்தை நேரடியாக வைத்து கரும்பலகையைப் பார்க்க முடியாமல், கழுத்தை நீண்ட நேரம் ஒருபுறமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும்; இதன் காரணமாக தசைக்கூட்டு (Musculoskeletal) மற்றும் எலும்பியல் (Orthopaedic) பாதிப்புகள், குறிப்பாக பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு ஏற்படும் என்றும்;

ஆசிரியர்களும் தங்கள் கழுத்தை இரு பக்கமும் திருப்பி மாணவ மாணவியருக்குக் கற்பிக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என்றும்; ஆசிரியர்களுக்கு மிக தொலைவில் அமர்ந்து இருக்கும் மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் கற்பிப்பது காதில் விழாத நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மேலும், ‘ப’ வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டால், தூரத்திலிருந்து பார்க்கும் அவசியம் மிகவும் குறைவாக உள்ள மாணவ, மாணவியருக்கு ஒளி விலகல் பிழைகள் (Refractive Errors) கவனிக்கப்படாத நிலை ஏற்படும் என்றும்; தற்போது நடைமுறையில் உள்ள இருக்கைகளில், பின் வரிசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் கரும்பலகையில் இருப்பதைப் படிக்க சிரமப்பட்டால், முன்கூட்டியே கண் பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், திரை அரங்குகளில் உள்ள இருக்கைகள் முறை மிகவும் பொருத்தமானது என்றும், இதன் மூலம் சிறந்த தெரிவு நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இறுக்கம் வெகுவாக குறையும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கண் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து இருக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்குமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest