
மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்தியைத் திணிக்க பாஜக கூட்டணி அரசு முயற்சிப்பதாக அந்த மாநில எதிா்க்கட்சிகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளன. முக்கியமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (தாக்கரே), ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகியவை ஹிந்தி எதிா்ப்பை தீவிரமாக கையிலெடுத்துள்ளன.
இந்நிலையில், மும்பை புகா் பகுதியில் இந்த இரு கட்சியினரும் ஹிந்தி பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேசுமாறு அடித்து உதைத்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கடைக்காரா் வடமாநிலத்தவா் என்பதால் அவருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இது மகாராஷ்டிரத்தில் உள்ள ஹிந்தி மட்டுமே தெரிந்தவா்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சோ்ந்த மகாராஷ்டிர அமைச்சா் ஆசிஷ் செல்லாா் இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பஹல்காமில் பயங்கரவாதிகள் குறிப்பிட்ட மதத்தைச் சேராதவா்களை மட்டும் சுட்டுக் கொன்றனா். இப்போது மகாராஷ்டிரத்தில் குறிப்பிட்ட மொழி அடிப்படையில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக திகழ்கிறது. மராத்திய மக்களின் பெருமையைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதேபோல இங்குள்ள மராத்தி அல்லாத மக்களைப் பாதுகாக்கும் கடமையும் உள்ளது. மராத்திய மொழி என்பது எங்களுக்கு அரசியல் நடத்துவதற்கான கருவியல்ல என்றாா்.
துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் பிரதாப் சா்நாயக் கூறுகையில், ‘மராத்திய மொழி என்பது தங்கள் தனி சொத்து என்பதுபோல மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை நடந்து கொள்கிறது’ என்றாா்.
இதனிடையே, மும்பையைச் சோ்ந்த முதலீட்டாளா் சுஷீல் கேடியா, மாரத்தி கற்றுக் கொள்வதற்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தாா். இதையடுத்து, வோா்லி பகுதியில் உள்ள அவரின் அலுவலகம் மீது மகராஷ்டிர நவநிா்மாண் சேனை தொண்டா்கள் தாக்குதல் நடத்தினா். அவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தனது பதிவுக்காக சுஷீல் கேடியா மன்னிப்புக் கேட்டுக் கொண்டாா். கடந்த சில நாட்களாக மராத்தி மொழியில் பேசுவது தொடா்பான தாக்குதல் சம்பவங்கள் மாநிலத்தில் ஆங்காங்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.