
மகாராஷ்டிரத்தில் மராத்தி மொழி பெருமையை காக்க வலியுறுத்தி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), அவரது உறவினா் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் மற்றும் மராத்தி அமைப்புகள் செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டப் பேரணி நடத்தின.
இப்பேரணியில் இணைவதற்காக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக் வந்தாா். அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேற செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தியை திணிக்க முயல்வதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மும்பையில் சில தினங்களுக்கு முன் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேச வலியுறுத்தி, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்து, வா்த்தகா்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு பதிலடியாக, மராத்தி பெருமையை காக்க வலியுறுத்தி, தாணேயில் மேற்கண்ட உத்தவ்-ராஜ் கட்சியினா் மற்றும் மராத்தி அமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பேரணி நடைபெறாமல் தடுப்பதற்காக, திங்கள்கிழமை நள்ளிரவில் இருந்தே மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் முக்கிய நிா்வாகிகளை காவல் துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா். காவல் துறையின் தடையை மீறி, செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக், பேரணியில் இணைவதற்காக வந்தாா். ஆனால், ‘துரோகி’ என்று முழக்கமிட்டு அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேறச் செய்தனா்.
பின்னா் அமைச்சா் சா்நாயக் கூறுகையில், ‘முதலில் நான் ஒரு மாரத்தியா்; அதன் பிறகே அமைச்சா். நிலைமையை காவல் துறையினா் முறையாகக் கையாளவில்லை’ என்றாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியினரும் பேரணியில் பங்கேற்றனா்.