mns-thackeray

மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இந்தி பேசுபவர்களை அவரது கட்சியினர் அடித்து உதைத்து வருகின்றனர்.

இதையடுத்து பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே அளித்திருந்த பேட்டியில்,” ராஜ் தாக்கரே எங்களது மாநிலத்திற்கு வந்தால் அவரை திரும்ப திரும்ப அடிப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ராஜ்தாக்கரே மும்பை மீராபயந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அதற்கு பதிலடி கொடுத்தார்.

அவர் தனது உரையில்,”மராத்தி மக்கள் வந்தால் கொடூரமாக அடிப்போம் என்று ஒரு பா.ஜ.க எம்.பி கூறுகிறார். நீங்கள் மும்பைக்கு வாருங்கள். உங்களை மும்பை கடலில் முக்கி முக்கி அடிக்கிறோம். இந்தி மொழிக்கு 200 ஆண்டு வரலாறு கூட கிடையாது. ஆனால் மராத்தி மொழி 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது.

இந்தி மொழி இந்தியாவில் 250 மொழிகளை அழித்துவிட்டது. இப்போது அது மராத்தியையும் அழிக்க பார்க்கிறது. அதை நாம் நடக்கவிடவேண்டுமா? வட இந்தியாவை சேர்ந்த யாருக்கும் இந்தி தாய்மொழி கிடையாது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து பேசுகிறார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. நான் மற்ற அரசியல்வாதிகளைவிட இந்தியை நன்றாக பேசுவேன். மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு முறை இந்தியை கட்டாயமாக்க முயன்றால் இதற்கு முன்பு கடைகளை மூடினோம். இனி நாங்கள் பள்ளிகளையும் இழுத்து மூடுவோம்.

இந்தியை கட்டாயமாக்க முதல்வர் பட்னாவிஸ் முயற்சி செய்வது துரதிஷ்டவசமானது. இந்தியை மக்கள் மீது திணித்து அவர்களை சோதித்து பார்க்கிறது. இதன் மூலம் மும்பையை குஜராத்துடன் இணைக்க விரும்புகிறார்கள்.

குஜராத்தில் பீகார் தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டபோது அது பிரச்னையாகவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு சின்ன சம்பவம் நடந்தாலும் அது தேசிய பிரச்னையாகிறது. மராத்தியர்கள் அனைத்து இடங்களிலும் மராத்தி பேசவேண்டும். மற்ற மொழிக்காரர்களையும் பேச வைக்கவேண்டும். மராத்தி கலாச்சாரம் மற்றும் மொழி விவகாரத்தில் எந்த வித சமரசமும் செய்துகொள்ளமாட்டோம்.

ராஜ் தாக்கரே

மும்பையில் அமைதியாக வாழவேண்டுமானால் கட்டாயம் மராத்தி கற்க வேண்டும். மராத்திக்கும், மராத்தி மக்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும். மீராபயந்தரில் இருந்து பால்கர் வரை வெளிமாநிலத்தவர்களை திட்டமிட்டு குடியமர்த்துகின்றனர்.

இதன் மூலம் அவர்களது ஆட்களை எம்.பி.க்களாக, எம்.எல்.ஏ.வாக, கவுன்சிலராக தேர்ந்தெடுக்க திட்டமிடுகின்றனர். சில சக்தி அதனை குஜராத்தோடு இணைக்க முயற்சி செய்கின்றன” என்று தெரிவித்தார்.

ஆனால் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest