
மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர். எனவே மராத்தி பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். மராத்தி பிரச்னையில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, தாக்கரே சகோதரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக துபே அளித்த பேட்டியில், “நீங்களா மராத்தி பேச ஆரம்பித்தீர்கள். யார் பிரெட்டை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். எங்களது பணத்தில் மகாராஷ்டிரா வாழ்கிறது. டாடா முதலில் பீகாரில் தான் தொழிற்சாலை அமைத்தது. நீங்கள் என்ன வரி கட்டுகிறீர்கள். உங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கிறதா?. எங்களிடம் சுரங்கங்கள் இருக்கிறது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கரில் சுரங்கங்கள் இருக்கிறது. உங்களிடம் சுரங்கம் இருக்கிறதா?. ரிலையன்ஸ் குஜராத்தில் ஆயில் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தொடங்கி இருக்கிறது. செமிகண்டக்டர் உட்பட அனைத்து தொழிற்சாலைகளும் குஜராத் வருகிறது.

இந்தி பேசும் எங்களை கொலை செய்யும் உங்களுக்கு துணிச்சல் இருந்தால் உருது பேசும் மக்களை கொலை செய்து பாருங்கள். துணிச்சல் இருந்தால் பீகார், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் செல்லுங்கள். உங்களை அடித்தே கொன்றுவிடுவார்கள். மும்பைக்கு மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் செயல் அவர்களை மேலும் பின் தங்கச் செய்துவிடும். மும்பை மாகிம் தர்கா பகுதிக்கு சென்று இந்தி, உருது பேசுபவர்களை கொலை செய்யுங்கள் பார்க்கலாம். அப்படி செய்தால் அவர்களை பால் தாக்கரேயின் வாரிசுகள் சொல்வேன்” என்று தெரிவித்தார்.
நிஷிகாந்த் துபே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். துபே இது போன்று பேசி இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுகிறது என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் எங்களுக்கு பின்னால் இருக்கின்றன. இந்தி பேசுபவர்களை விட நாங்கள் முன்னேறி இருக்கிறோம். அப்படியிருக்கும் போது நாங்கள் ஏன் இந்தி படிக்கவேண்டும். இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கின்றன” என்றும் ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.