GxUwM1maIAAPDqb

போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது, மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்கு திருட்டுக்கு பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை பேசிய ராகுல் காந்தி, மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இது தேசத் துரோகம் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் காங்கிரஸின் வருடாந்திர சட்ட மாநாட்டில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பேசியதாவது:

”தேர்தல் முறையைப் பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே தேர்தல் முறையில் ஏதோ தவறு இருப்பதாக எனக்குசந்தேகம் இருந்து வந்தது.

குஜராத் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாதது ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் இதைப் பற்றி பேசும்போதெல்லாம் மக்கள் ஆதாரங்கள் எங்கே என்று கேட்டார்கள்? பின்னர் மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், 4 மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நாங்கள் படுதோல்வி அடைந்தோம். 3 வலிமையான கட்சிகள் திடீரென மறைந்துவிட்டது.

தேர்தல் முறைகேடுகளை பற்றி தீவிரமாக ஆராய்ந்தோம். மகாராஷ்டிரத்தில் அதனை கண்டுபிடித்தோம், மக்களவை தேர்தலுக்கும் பேரவைத் தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பாஜகவுக்கு சென்றது.

தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாள்களில் மக்களவைத் தேர்தலை பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்.

உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடிக் கொண்டிருந்தபோது அருண் ஜெட்லியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. போராடினால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. யாருடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தேன்.” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாசல் முதல்வர் சுக்விந்த் சிங் சுக்லா உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Lok Sabha Opposition Leader Rahul Gandhi alleged that the BJP won the Lok Sabha elections by rigging the polls using fake voters.

இதையும் படிக்க : ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest