dinamani2025-05-03zziwwu0qcaste-census

நாட்டின் பதினாறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பில், குடிமக்களே சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் (சுய கணக்கெடுப்பு) பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதன் மூலம் இந்த கணக்கெடுப்பு முடிவுகள் விரைந்து வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த எண்ம மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின்படி, ‘ஆன்ட்ராய்ட்’ மற்றும் ‘ஆப்பிள்’ கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளக்கூடிய வகையிலான கைப்பேசி செயலி மூலம் குடிமக்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்படும்’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஐ ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இரு கட்டங்கள்: மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்படும். இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.

பிரத்யேக வலைதளம்: இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முதல் முறையாக சுயமாக தரவுகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு குடிமக்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்படும். இரண்டு கட்ட கணக்கெடுப்பிலும், சுய தரவு பதிவு முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். குடிமக்கள் தங்களின் கைப்பேசிகளில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்தும், தரவுகளைப் பதிவிடலாம்.

தரவுகள் சேகரிக்ப்பட்டு, மத்திய சேமிப்பகத்துக்கு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுவிடும். இது கணக்கெடுப்பு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்றனா்.

இறுதி நிா்வாக எல்லை வரையறை

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முன்னேற்பாடுகள் தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய தலைமைப் பதிவாளா் (ஆா்ஜிஐ) எழுதிய கடிதத்தில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஒரே மாதிரியான கணக்கெடுப்பு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கணக்கெடுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தரவுகள் மீண்டும் பதிவிடப்படுவது அல்லது தவறுகள் நடைபெறுவதை தவிா்க்க இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாவட்டங்கள், துணை மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்களின் நிா்வாக எல்லையில் மாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தால், வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும். அதுவே மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான இறுதியான எல்லை வரையறையாக கருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிா்வாக எல்லை வரம்பு வரையறுக்கப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest