
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71). நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
மதன் பாப் இறப்புக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இல்லத்துக்கு வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மதன் பாப்-க்கு புற்றுநோய்
“ஒருவருஷத்துக்கு முன்னாடியே அவருடைய மகன் வேற ஒரு விஷயத்துக்காக என் வீட்டுக்கு வந்தபோது, ‘அப்பாவுக்கு கேன்சர் இருக்கு’ என்றார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவரிடம் ஃபோனில் பேசியபோது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாகப் பேசினார்.” என்றார்.

தொடர்ந்து, “மதன் பாப் ‘உங்களது அடுத்த படம் எப்போது சார்? எனக்கு வாய்ப்புகொடுக்காமல் இருக்கக் கூடாது’ என உரிமையாக கேட்பார். தெனாலிக்குப் பிறகு வில்லன், லிங்கா என என்னுடைய நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
நல்ல மனிதர் எப்போதும் சிரித்துகொண்டே இருப்பார். ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’னு சொல்வாங்க. அவரை விட அதிகம் வாய் விட்டு சிரித்தது ரொம்ப கம்மி, குமரிமுத்து மாதிரி ஒருசிலர்தான். அவரை எப்படி நோய் தாக்கியது எனத் தெரியவில்லை…” எனப் பேசினார்.
“ரஹ்மானே அவரிடம் வேலை செய்திருக்கிறார்”
மேலும், “நல்ல மனிதர். நான் என்னுடைய ஒரு நண்பரை இழந்திருக்கிறேன். எனக்கு அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கு. தெனாலி ரீ ரெக்கார்டிங்கில்தான் எனக்கு அவர் இசைக்கலைஞர் எனத் தெரியும்.
ரஹ்மான் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்த கேரக்டர் இவருக்கு கொடுத்ததற்கு தாங்க்யூ’ என்றார். எதற்கு எனக் கேட்டபோது ‘ இவர் என் குருக்களில் ஒருவர்’ என்றார். இவர்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மானே பணியாற்றியிருக்கிறார். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.” என்றார்.