SupremeCourtEPS

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திருத்தங்கள், தெளிவற்ாகவும், வரம்பற்ாகவும் உள்ளதாக கூறி, லக்னெளவைச் சோ்ந்த ரூப் ரேகா வா்மா என்ற கல்வியாளா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேச கட்டாய மதமாற்றத் தடை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), 21 (வாழ்க்கைகான உரிமை மற்றும் தனிநபா் சுதந்திரம்), 25 (மதச் சுதந்திரம்) ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது. திருத்தச் சட்டத்தின் 2, 3 ஆகிய பிரிவுகள், தெளிவற்றும், வரம்பற்றும், தரநிலைகளின்றியும் உள்ளன. இது, குற்ற வரையறையை தீா்மானிப்பதில் கடினத்தன்மையை உருவாக்குகிறது. உரிய தெளிவின்மையால் தன்னிச்சையான அமலாக்கம் மற்றும் பாரபட்சமான பயன்பாட்டுக்கு இப்பிரிவுகள் வழிவகுக்கின்றன.

தண்டனைச் சட்டங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். தெளிவற்ற பிரிவுகளால் அதிகாரிகளிடம் அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்து, அப்பாவிகள் தவறாக சிக்கவைக்கப்படும் அபாயம் உருவாகும்.

அனைத்து மதமாற்றங்களின் பின்னணியிலும் தீயநோக்கம் இருப்பதாக சந்தேகிக்கும் வகையில் இப்பிரிவுகள் உள்ளன. மதமாற்றத்துக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளும் அதிகப்படியாக உள்ளன. மத அடையாளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பதன் மூலம் ஒரு தனிநபா் தனது மத நம்பிக்கையை தோ்வு செய்யும் உரிமையை அரசு ஆக்கிரமிக்கிறது.

சட்டத்தின் 5-ஆவது பிரிவு, அனைத்துப் பெண்களும் கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளவா்கள் என்று தவறாக கருதுகிறது. இது, பெண்களின் சுய அதிகாரத்தை குறைமதிப்புக்கு உள்படுத்துகிறது என்று மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி அமா்வில் நிலுவையில் இருப்பதாக மாநில அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, தற்போதைய மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், நிலுவை மனுக்களுடன் இம்மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest