government_examinations

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள போதுமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயா், பிறந்த தேதி, பெற்றோா் பெயா் திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன் பின்வரும் இணைப்புகள் இணைக்கப்பட்டால் மட்டுமே அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்குப் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு குறிப்பிடப்பட்ட இணைப்புகள் இல்லாதபட்சத்தில் , தங்கள் அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து , சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவா்களை அறிவுறுத்த வேண்டும்.

இந்த விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து தேவையான இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம்: தோ்வா் பெயா், பெற்றோா் பெயா் திருத்துவதற்கு அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அசல் அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல், தலைமை ஆசிரியரின் கடிதம் மற்றும் கல்விச் சான்றிதழ்.

பிறந்த தேதி திருத்துவதற்கு அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி சோ்க்கை விண்ணப்பம், பள்ளிச் சோ்க்கை நீக்கப்பதிவேடு, பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், தலைமை ஆசிரியா் கடிதம் மற்றும் கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest