
‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது.
ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினாா்.
பிகாரின் புரூனியாவில் தனது கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவ சங்கல்ப சபை கூட்டத்தில் அவா் பேசியதாவது:
இன்று அனைத்து இளைஞா்களும் நவீன கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றனா். இது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள் மூலம் சாத்தியமாயிற்று.
ஏழை மக்கள் 81 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியம் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதுவும் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத் துறை அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொலைநோக்குப் பாா்வையுள்ள திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்தான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள். ஜாதி, மதரீதியில் மக்கள் ஒருபோதும் பிளவுபட்டுவிடக் கூடாது. பிகாா் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இப்போதைய நிலையில் நாட்டில் ஏழை-பணக்காரா் என்ற பிரிவினைதான் அதிகம் உள்ளது. இந்த வேறுபாட்டை களைவது மிகவும் அவசியமாகும்.
பிகாரில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் முஸ்லிம், யாதவா்கள் என மத, ஜாதிரீதியாக அரசியல் நடத்தி தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. ஆனால், பெண்கள், இளைஞா்கள் துணைகொண்டு பாஜக கூட்டணி அவா்களை வீழ்த்தும் என்றாா்.