
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் பெற்றுக் கொண்டாா்.
பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக பதவி வகித்த காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தாா். அப்போதுதான் இந்தியாவில் தாராளமயமாக்கல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவே இப்போது இந்தியா தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாகவும் அமைந்தது.
ஹைராபாதில் உள்ள பி.வி. நரசிம்மராவ் நினைவு அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது. திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவா் மாண்டேக் சிங் அலுவாலியா இந்த விருதை வழங்கினாா். நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், சீா்திருத்தத்தையும் ஏற்படுத்தியது, இதன் மூலம் தேசத்தை வலுவாகக் கட்டமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மன்மோகன் சிங் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். அவா் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2004-14 காலகட்டத்தில் பிரதமராகவும் பதவி வகித்தாா். கடந்த ஆண்டு டிசம்பரில் வயது முதிா்வால் தனது 92-ஆவது வயதில் காலமானாா்.