E0AEAEE0AEA9-E0AE85E0AEB4E0AF81E0AEA4E0AF8DE0AEA4E0AEAEE0AF8D

இயற்கையாகவே மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த அழுத்தம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் உந்து சக்தியுடன் செய்ய முடியாது.

மன அழுத்தம் எவ்வாறு ஒருவரை பாதிக்கிறது? அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா; பெண்களா என்று சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

சாதாரணமாகவே மனதில் அழுத்தம் இருப்பதினால்தான் தினமும் காலையில் எழுந்து வேலைக்குப் போக வேண்டும்; பள்ளிக்குப் போக வேண்டும் என்று கிளம்பிச் செல்கிறோம்.

குடும்பத் தலைவிகள் காலையிலிருந்து பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்புவது, வீட்டில் இருக்கும் வேலைகளைப் பார்ப்பது போன்று மன அழுத்தத்தை மோட்டிவேஷனாக மாற்றி வேலையைச் செய்கிறார்கள்.

மன அழுத்தம் இருப்பதினால்தான் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்துடனும் விழிப்புணர்வோடும் செய்கிறோம். அன்றாட வேலையைச் சரியாகச் செய்வதற்கு மன அழுத்தம் ஓர் உந்துசக்தியாக உள்ளது.

என்னதான் மன அழுத்தம் உந்து சக்தியாக இருந்தாலும் அதற்கும் ஓர் அளவு உண்டு. மன அழுத்தத்தின் அளவு அதிகமாகும்போது ஒரு மனிதனுடைய உடல்நலம், மனநலம், உணர்வு சார்ந்த நலம் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

பதட்டம், மனச்சோர்வு நிலை, அதிகமாகக் கோபப்படுதல், அதிக எரிச்சல் அடைதல், ஒரு நேரம் சந்தோஷமாக இருத்தல் மற்றும் மற்றொரு நேரம் கோபம், அழுகை, வாழ்க்கையின் மீது விரக்தி ஆகியவை ஆண், பெண் இருபாலருக்குமான மன அழுத்த அறிகுறிகள்.

மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் (Epinephrine and cortisol) என இரண்டு வகையான ஹார்மோன்கள் சுரக்கும். இவை ஒரு மனிதனை விழிப்புடன் இருக்க மற்றும் தூண்டுதலோடு வேலையைச் செய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹார்மோன்கள்.

காலையில் எழுந்திருக்கும்போது கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்த காலம்தொட்டு இந்த எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் அதிகாலை நேரத்தில் அதிகமாக சுரந்து, அதிகாலை நேரத்தில் எழுந்து விலங்குகளை வேட்டையாட இந்த ஹார்மோன்கள் உதவியாக இருந்தன.

மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளின் படிப்பு, கணவரைக் கவனித்துக் கொள்ளுதல், கணவருடைய மற்றும் தன்னுடைய தாய் தந்தையைக் கவனித்துக் கொள்ளுதல், இதற்கிடையில் தன்னைக் கவனித்துக் கொள்ள மறப்பதால் ஆரோக்கியப் பிரச்னைகள் என அதிகம் மன அழுத்தத்துக்கு பெண்கள் ஆளாகிறார்கள்.

எந்நேரமும் எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும் நபருக்கு ரத்த நாளங்கள் சுருங்கும்; ரத்த அழுத்தம் அதிகமாகும்.

வளர்சிதை மாற்றங்கள் அதிகமாகி சாப்பிடுவதற்குத் தூண்டுதல் ஏற்படும். உடலுக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள்.

கூடவே ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நாளடைவில் இதய நோய், சிறுநீரகம், கல்லீரல் நோய் மாதிரியான பிரச்னைகளுக்கு மன அழுத்தம் ஆரம்பப் புள்ளியாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கார்டிசோல் மற்றும் எபினெர்ஃபின் ஹார்மோன்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது ஒரே மாதிரியாகத்தான் தூண்டப்படுகின்றன.

ஆனால், பெண்களுக்கு மன அழுத்தத்தைச் சமாளிக்கக்கூடிய ஆக்ஸிடோஸின் ஹார்மோன், இயற்கையாகவே மூளையில் இருந்து சுரக்கிறது.

இந்த ஆக்ஸிடோஸின் ஹார்மோன் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாகச் சுரக்கிறது. கூடவே பெண்களுக்கான ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் இரண்டும் மன அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசாலுக்குச் சமமாகச் சுரந்து மன அழுத்தத்தைச் சமாளிக்க வைக்கும்.

என்றாலும், ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக மன அழுத்தத்தைக் கொடுக்கும்போது இந்த மெக்கானிசம் பாதிக்கப்படுகிறது.

 மகிழ்ச்சி ஹார்மோன்
மகிழ்ச்சி ஹார்மோன்

பெண்கள் மன அழுத்தத்தைச் சந்திக்கும்போது அழுவதற்கு யோசிக்கவே மாட்டார்கள். தவிர, அவர்களின் மன அழுத்தத்திற்கான காரணத்தையும், வலிகளையும் மனதிற்கு நெருங்கியவர்களிடம் எடுத்துக்கூறி பேசிவிடுவார்கள். இதன் மூலமாக மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இதுவே ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அதிகமாகப் பேசுவதில்லை. அதற்கு பதிலாக யாரிடமும் நடந்தவற்றை எண்ணி விவாதிக்காமல் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி செய்கிறார்கள்.

அவர்கள் அந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவது, வெளியூர் செல்வது, ட்ரிப் போவது போன்றவற்றைச் செய்ய விரும்புகிறார்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தான் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

குடும்பத்தில் ஏற்படுகின்ற பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, குடும்பம் சார்ந்த கடமைகள், உறவுகள் ஆகியவற்றை சரியான நிலைமையில் பாதுகாக்க ஆண்களைவிட பெண்கள்தான் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளின் படிப்பு, கணவரை கவனித்துக் கொள்ளுதல், கணவருடைய மற்றும் தன்னுடைய தாய் தந்தையை கவனித்துக் கொள்ளுதல், இதற்கிடையில் தன்னை கவனித்துக் கொள்ள‌ மறப்பதால் ஆரோக்கியப் பிரச்னைகள் என அதிகம் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்தக் கால பெண்களுக்கு பணிபுரியும் இடத்திலும் பல பிரச்னைகள் வரும். இதனாலும் அவர்களுக்கு அதிக மன அழுத்தம் வருகிறது.

 டாக்டர்  ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

பெண்கள், தங்களுக்காக வாழ முடியவில்லை என்ற எண்ணம் ஏற்படும்போது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஆண்கள் கல்வி, வேலை, பதவி என சிறப்பாக செயல்படும்போது, தங்களால் அவ்வாறு செயல்பட முடியவில்லை என்பதாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஒரு வேலையை கண்டிப்பாக செய்தாக வேண்டும் மற்றும் வேலையில் நூறு சதவீதம் துல்லியத்தன்மையை எதிர்பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, வேலையை முடிந்த அளவுக்குச் செய்யலாம்.

நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, சராசரியான 7-8 மணி நேர உறக்கம், யோகா, தியானப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

செடிகள் வளர்ப்பது, தோட்டக்கலைக்கு நேரம் ஒதுக்குவது போன்ற செயல்களை மேற்கொள்ளும்போது மன அழுத்தம் குறையும்.

மீ டைம் கடைப்பிடித்தல், அதாவது 24 மணி நேரமும் பிறருக்காக யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு தங்களுக்காக நேரம் ஒதுக்கிச் செயல்களைச் செய்வது,

நண்பர்களிடம் உரையாடுவது,

பிடித்த வேலைகளைச் செய்வது,

தேவையற்ற விஷயங்களுக்கு நோ சொல்வது,

மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வேலைகளைத் தவிர்த்துவிட்டு வேறு வேலைகளைச் செய்வது,

தேவைப்பட்டால் மனநல மருத்துவரை அணுகுவது ஆகியவை பெண்களை மன அழுத்தத்தில் இருந்து காக்கும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest