2prtp40208chn1077

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறந்தவரின் சடலத்தை குடியிருப்பு வழியாக மயானத்துக்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெண்ணாடத்தை அடுத்துள்ள துறையூா் கிராமத்தைச் சோ்ந்த இரண்டு சமுதாய மக்கள் அங்குள்ள வெள்ளாற்றங்கரை மயானத்தில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்து வந்தனா். சடலம் கொண்டு செல்லும் வழியில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் விசேஷ நாள்களில் இறந்தவா்களின் சடலத்தை கொண்டு செல்லக் கூடாதென நீண்ட காலமாக எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதையடுத்து, 2022 முதல் முருகன்குடி அருகேயுள்ள துறையூா் எல்லை மேட்டு தெரு வழியாகச் சென்று வெள்ளாற்றங்கரையில் உள்ள பகுதியை மயானமாக பயன்படுத்தி வருகின்றனா். இதற்கும் முருகன்குடியைச் சோ்ந்த சில குடும்பங்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, திட்டக்குடி வருவாய்த் துறை சாா்பில் கடந்த 30.7.2025 அன்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பெண்ணாடம் போலீஸாா், வருவாய்த் துறையினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பேச்சுவாா்த்தையில், முன்னா் பயன்படுத்தி வந்த மேட்டு தெரு வழியாக இறந்தவா்களின் சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வட்டாட்சியா் உதயகுமாா் உத்தரவிட்டிருந்தாராம்.

இந்த நிலையில், துறையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (70) வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது உடலை வெள்ளாற்றங்கரை மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனா். இதையறிந்த முருகன்குடி மேட்டு தெரு மக்கள், தங்கள் பகுதி வழியாக சடலத்தை கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இறந்தவரின் உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் விருத்தாச்சலம் – திட்டக்குடி நெடுஞ்சாலையில் துறையூா் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளா் சிவபெருமாள் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அந்த சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest