nimisha_priya112033

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.

யேமன் நாட்டு சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் மக்கள் சேர்ந்து ரூ.8.60 கோடி வரை (சுமாா் 10 லட்சம் டாலா்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனா்.

இதனையடுத்து, கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொருபுறம் மத்திய அரசு தரப்பிலிருந்தும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னேறங்களின் காரணமாக, இன்று (ஜூலை 16-இல்) நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக யேமன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது குறித்து, யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்து மஹதியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி பேசுகையில், ’நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை என்றும் எவ்விதத்தில் சமரசத்துக்கு முன்வந்தாலும் அதனை முற்றிலும் நாங்கள் நிராகரிப்போம்’ என்றும் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், இது குறித்து, நிமிஷா பிரியா தரப்பில் வாதாடும் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருப்பதாவது:

“கொல்லப்பட்ட நபரின் சகோதரர் தெரிவித்திருக்கும் விஷயங்களையெல்லாம் நாங்கள் பின்னடைவாகக் கருதவில்லை. இவையனைத்தும், இந்த செயல்முறையில் நடைபெறும் விஷயங்கள்தான். கொல்லப்பட்ட நபரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாங்கள் சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறோம்.

செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) நிமிஷாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நல்ல மனிதர்கள் பலரும் அவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளனர். அதற்காகச் செயல்பட்டும் வருகின்றனர்.

நிமிஷாவைக் காப்பாற்ற ‘சர்வதேச செயல் குழுவில்’ முக்கியமாக உயர்நிலையில் 19 உறுப்பினர்களும் பல்வேறு துறைசார் 300 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் மட்டுமில்லாது, செல்வாக்குமிக்க தொழிலதிபர்களான எம். ஏ. யூசுஃப் அலி(லூலூ குழுமத் தலைவர்), போபி செம்மனூர் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து காப்பாற்ற முன்வந்துள்ளனர்” என்றார்.

முழு விவரம்:

யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (38) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.

பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த இக்கட்டான சூழலில், 2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.

இதனைத்தொடர்ந்து, யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.

there are a good lot of people working to spare the Kerala nurse from death row

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest