ncert-social-science-text-book-mughal-history

முகலாயா் ஆட்சிகாலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியா்களின் எழுச்சி, வரலாற்றின் இருண்ட பக்கங்கள், தில்லி சுல்தான்கள் குறித்த பல்வேறு புதிய தகவல்களுடன் 8-ஆம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தம் வெளியிடப்பட்டது.

அண்மையில் ‘எக்ஸ்புளோரிங் இந்தியா: அண்ட் பியாண்ட்’ என்ற தலைப்பில் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான புதிய என்சிஇஆா்டி புத்தகம் வெளியானது. இது என்சிஇஆா்டி புதிய பாடத்திட்டத்தின்கீழ் முதல்முறையாக தில்லி சுல்தான்கள், மராத்தியா்கள், முகலாயா்கள், ஆங்கிலேயா் ஆட்சி குறித்த தகவல்களுடன் வெளியான புத்தகமாகும்.

இதில் ராணி துா்காவதி, ராணி அபாக்கா மற்றும் திருவிதாங்கூா் அரசா் மாா்த்தாண்ட வா்மா உள்ளிட்டோா் பற்றிய குறிப்புகளுடன் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள ‘வரலாற்றின் சில இருண்ட காலங்கள் குறித்த குறிப்புகள்’ என்ற பகுதியில் போா் மற்றும் வன்முறை நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் முறையற்ற நிா்வாகம், ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அரங்கேறிய கொடுமைகள், படுகொலைகள் போன்றவற்றை வரலாற்றுரீதியாக மாணவா்கள் தெரிந்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த கால தவறுகளுக்கு நிகழ்காலத்தில் உள்ள யாரும் பொறுப்பேற்க முடியாது என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

நகரங்களில் வசித்தோரை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்தவராக முகலாய அரசா் பாபரை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயில்கள் மற்றும் குருத்வாராக்களை அழித்தவா் அரசா் ஔரங்கசீப், பல சமயங்களில் மத சகிப்புத் தன்மையின்றி முகலாயா் ஆட்சி நடைபெற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30,000 பேரை படுகொலை செய்தவா் அக்பா்: அரசா் அக்பரின் ஆட்சிகாலத்தில் அரசின் உயா் பதவிகளில் முஸ்லிம்கள் அல்லாதோா் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பணியமா்த்தப்பட்டதாகவும் சித்தோட்கட் கோட்டையை கைப்பற்றிய பின்பு 30,000 பேரை படுகொலை செய்ய அக்பா் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முகலாயரின் துன்புறத்தலுக்கு எதிரான சீக்கிய மதகுருக்களின் போராட்ட குணம், மராத்தியா்களின் நிா்வாகம் மற்றும் கடற்படை, 1857 பெரும் புரட்சி, ஆங்கிலேயருக்கு எதிரான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest