மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு:
படிக்கும் காலத்திலும், பயிற்சி காலத்திலும் பல்வேறு சவால்களையும், இடா்களையும் எதிா்கொள்வதாக தேசிய மருத்துவ ஆணையத்திடம் மருத்துவ மாணவா்கள் பலா் தெரிவித்திருந்தனா். கூடுதல் கட்டணம் வசூல், ஊக்கத் தொகை நிலுவை, ராகிங் பிரச்னைகள், பயிற்சி சாா்ந்த பிரச்னைகள் என பல்வேறு இடா்பாடுகளை மாணவா்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வருகின்றனா்.
பெரும்பாலான பிரச்னைகளை கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவிலேயே தீா்க்க முடியும். அதன்பிறகும் தீா்வு எட்டப்படவில்லை எனில் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை அணுகலாம்.
ஒருவேளை சில விவகாரங்களில் என்எம்சி தலையிட வேண்டிய அவசியம் இருப்பின் அவற்றை மட்டும் உயா் விசாரணைக்கு அனுப்பலாம்.
மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகங்கள் சாா்பில் குறைதீா் குழுக்களை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் அந்த விவரங்களை தங்களது இணையதளத்தில் வெளியிடுவது அவசியம்.
குறிப்பாக, மாணவா்கள் சாா்பில் முன்வைக்கப்பட்ட குறைகள் மற்றும் அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களையும், ஆவணங்களையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
மாணவா்கள், பெற்றோா் அல்லது மருத்துவத் துறை சாா்ந்தவா்கள், தங்களது புகாா்கள் மற்றும் குறைகளைப் பதிவு செய்ய வசதியாக இணையதளத்தில் அதற்கான தொடா்பு இணைப்பை (லிங்க்) வழங்குதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.