1000406230

கேரள மாநிலத்தில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன.

கூண்டில் சிக்கிய புலி

அதிலும் குறிப்பாக யானை, புலி போன்ற உயிரினங்களுக்கான வாழிட போதாமை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் தஞ்சமடையும் வனவிலங்குகளால் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று ரப்பர் தோட்ட தொழிலாளியை கடந்த மே மாதம் தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதனை தின்ற அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கூண்டுகள் அமைத்தும்‌ கண்காணிப்பு கேமராக்களைப்‌ பொருத்தியும் வனத்துறையினர் தேடி வந்தனர் ‌.

கூண்டில் சிக்கிய புலி

போக்கு காட்டி வந்த அந்த புலி இன்று காலை கூண்டுக்குள் சிக்கியிருக்கிறது. சிகிச்சைக்காக அந்த புலியை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர்,” தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற பகுதியில் 5 கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்தோம். கிட்டத்தட்ட 53 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு இன்று காலை அந்த புலி கூண்டுக்குள் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த புலி என்பதை தானியங்கி கேமிராக்களில் பதிவான படங்களை வைத்து ஒப்பீடு செய்து உறுதி செய்தோம்.

கூண்டில் சிக்கிய புலி

மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் புலியின் உடலில் காயங்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே பகுதியில் நாங்கள் விடுவிப்போம் என சந்தேகமடைந்த மக்கள், இந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன் உடல்நிலைக்கு ஏற்பவே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest