
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் அழைப்பை ஏற்று இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற மல்லிகார்ஜுன கார்கே, மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கார்கே தெரிவித்ததாவது:
“ஜூலை 21 தொடங்கும் மாநிலங்களவை கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெற எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. மக்கள் பிரச்னை, அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை, சமூக – பொருளாதார பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து டிரம்பின் கருத்து உள்ளிட்டவையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.