Narendra-modi-meeting-ANI

உத்தரகண்டில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.

இமயமலையையொட்டிய உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாக மேகவெடிப்புகள் ஏற்பட்டு, பலத்த மழை கொட்டித் தீா்த்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. குறிப்பாக உத்தரகாசி, சமோலி, ருத்ரபிரயாகை, பாகேஸ்வா், நைனிடால் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் நேரிட்டுள்ளன.

உத்தரகண்டில் கடந்த ஏப்ரலில் இருந்து நீடித்துவரும் இயற்கைப் பேரிடரில் இதுவரை 85 போ் உயிரிழந்துவிட்டனா்; 128 போ் காயமடைந்தனா். மேலும் 94 பேரை காணவில்லை என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் மோடி, மழை-வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைக்க மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என உறுதியளித்தாா். மழை-வெள்ளத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமா், மீட்புக் குழுவினருடனும் கலந்துரையாடினாா். முன்னதாக, டேராடூன் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பஞ்சாபுக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.1,500 கோடி அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest