
கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கப்படுவது வழக்கம். அந்த கேண்டீனில் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது எனவும், அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது எனவும் புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ரீஜினல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் ‘பீப் பெஸ்ட்’ போராட்டம் நடத்தினர். அலுவலக கேண்டீனில் மாட்டுக்கறி சமைத்து அதிகாரிகள் சேர்ந்து சாப்பிட்டனர். பீப் பெஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் பீகாரைச் சேர்ந்தவர் எனவும், அவர், அதிகாரிகளை மதிக்காமல் செயல்படுவதாகவும் ஏற்கனவே புகார் இருந்துவந்ததது. அதற்கிடையே மாட்டுக்கறிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளின் ‘பீப் பெஸ்ட்’ போராட்டம் நடத்தப்பட்டது.

இதுபற்றி பேங்க் எம்பிளாயீஸ் பெடரேசன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில், “அரசியலமைப்பின் வழிகாட்டுதல்படிதான் இந்த வங்கி இயங்குகிறது. எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்பது தனி நபரின் உரிமையாகும். ஒவ்வொருவருக்கும் அவருடைய உணவை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. இங்குள்ள கேண்டீனில் குறிப்பிட்ட நாட்களில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டு வந்தது. இனி மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என கேண்டீன் ஊழியர்களிடம் மேலாளர் கூறியுள்ளார். யாரையும் மாட்டுக்கறி சாப்பிட நாங்கள் நிர்பந்திக்கவில்லை. ஆனால், இது எங்களுடைய போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

மத்திய அரசின் அஜண்டாவை நிறைவேற்றும் வகையில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என ரீஜினல் மேலாளர் தெரிவித்துள்ளதாகவும். உணவு உண்ணும் உரிமையை பறிக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். என்ன உடை அணியவேண்டும், என்ன உணவு உண்ன வேண்டும், எதைப்பற்றி சிந்திக்கவேண்டும் என முடிவு செய்யவேண்டியது உயர் அதிகாரிகள் அல்ல என கே.டி.ஜலீல் எம்.எல்.ஏ தெரிவித்தார்.