
கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, இச்செயலில் ஈடுபட்டவர்கள் இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா, உயிரியல் பேராசிரியர் சந்தீப் மற்றும் அவர்களின் நண்பர் சந்தீப்.
இதில், இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா முதலில் பாடக் குறிப்புகளைப் பகிர்வதாக மாணவிக்கு மெசேஜ் அனுப்பி நட்பாகப் பழகியிருக்கிறார்.

பின்னர் ஒருநாள் அந்த மாணவியை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொன்னால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று மிரட்டியிருக்கிறார்.
சில நாள்கள் கழித்து, உயிரியல் பேராசிரியர் சந்தீப் அந்த மாணவியை அணுகியிருக்கிறார்.
மாணவி அதை எதிர்க்கவே, நரேந்திராவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக சந்தீப் பிளாக்மெயில் செய்து மிரட்டி தனது நண்பர் அனூப் அறையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
பின்னர், அதேபாணியில் அனூப் தனது அறையின் சிசிடிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான மாணவி, பெங்களூரூவில் தனது பெற்றோரை சந்தித்தபோது அவர்களிடம் நடந்த விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தை அணுகி, மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பேராசிரியர்கள் நரேந்திரா, சந்தீப் மற்றும் அவர்களின் நண்பர் அனூப் ஆகியோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.