randeep

மாநிலங்களின் நிதி சுதந்திரத்தை பறித்து கூட்டாட்சிக்கு மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

இதுதொடா்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

மாநிலங்களின் கடன் குறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை, எந்த அளவுக்கு சூழல் மோசமடைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.

கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ரூ.17.57 லட்சம் கோடியாக இருந்த மாநிலங்களின் பொதுக் கடன், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.59.60 லட்சம் கோடியாக அதிகரித்தது. 10 ஆண்டுகளில் மாநிலங்களின் பொதுக் கடன் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

செஸ் மற்றும் மேல் வரிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.1.70 லட்சம் கோடி வசூலிக்கப்படுகிறது. இதை மத்திய அரசே வைத்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இந்த வரிகளை ஜிஎஸ்டியுடன் இணைத்தால், தங்கள் பங்கை மாநிலங்கள் பெறும். ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ததால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய செஸ் இழப்பீடு உருவாக்கப்பட்டது. அந்த இழப்பீட்டை வழங்குவதற்கான காலம் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.

அந்த செஸ் தொகை தற்போது மத்திய அரசின் கடன்களை அடைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை நிகழாண்டு அக்டோபருக்கு பிறகு செய்வதற்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளிக்கவில்லை. ஆனால் இதைத் தொடர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

வரி விவகாரத்தில் மாநிலங்களுக்கு மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. தனது பங்கை மத்திய அரசு தக்கவைத்து பாதுகாத்துக் கொள்கிறது.

இது ஒத்துழைப்பு கொண்ட கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சிக்கு அளிக்கப்படும் நெருக்கடி. ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் கையாளப்படும் விதம், தன்னிச்சையான மத்திய வரிகளால் மாநிலங்களின் நிதி சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest