
வார இதழ்களுக்குத் தொடர்கதை எழுதிவரும் எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்), தான் ஒரு படைப்பாளன், தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியே தானும் ஒரு கடவுள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்.
அவரது ஒரு கதையில் 49 கொலைகள் செய்த தனபால் என்கிற தாதா, 50வது கொலையைச் செய்ய முடியாமல் இருக்கிறார். அவரது கூட்டத்தில் இருக்கும் ஒருவரால் கொலை செய்யப்படப் போகிறார் என்ற செய்தியை ஜோசியரிடமிருந்து பெறுகிறார்.
மற்றொரு கதையில் விவசாயக் கூலியின் மகளான ராஜி (மிருதுளா) மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்க, கஷ்டமான நுழைவுத் தேர்வு ஒன்று அதற்குத் தடைக்கல்லாக வருகிறது.

மூன்றாவது கதையில் ரமேஷ் – ராதிகா தம்பதியினர் தங்கள் வீட்டு மேசையில் வைத்த இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு காணாமல் போக, சந்தேகம் வீட்டில் வேலை பார்க்கும் செல்வியின் (ஐஸ்வர்யா ரகுபதி) மீது விழுகிறது.
இப்படியாக மூன்று கதைகளும் இக்கட்டான சூழ்நிலைக்கு வர, அந்தக் கதையில் இருக்கும் மாந்தர்கள் அனைவரும் தங்கள் தரப்பில் இருக்கும் நியாய அநியாயங்களை எழுத்தாளரிடம் முறையிட முன் வருகிறார்கள்.
பின் கொலைவெறியுடன் துரத்தவும் செய்கிறார்கள். எழுத்தாளருக்கு என்ன ஆனது, அவரின் கதாபாத்திரங்களின் தேவை என்ன என்பதை ஃபேண்டஸி டிராமாவாகச் சொல்கிறது ‘மாயக்கூத்து’.
எழுத்தாளனுக்கு அழிவில்லை, அந்தக் கடவுளுக்கும் நிகரானவன் நான் என்ற அகங்காரம் கொண்டு செருக்கோடு நிற்பது, அதே நேரத்தில் தான் எழுதிய கதாபாத்திரங்கள் கண்முன் தோன்றிய பிறகு குழப்ப மனநிலையோடும், உயிர் பயத்தோடும் ஓடுவது எனச் சிறப்பானதொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாகராஜன் கண்ணன்.
குறிப்பாகத் தான் உருவாக்கிய உலகம், நிஜ உலகம் இரண்டுக்கும் நடுவே சுழலுகிற தவிப்பை இறுதி வரை லாகவமாகக் கொண்டு சென்றிருக்கிறார்.
மூன்று கிளைக்கதைகளில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், மு.ராமசாமி தவிர்த்து பிறர் பார்த்துப் பழகிய முகங்கள் இல்லையென்றாலும், தேர்ந்த நடிப்பால் நம்மோடு நெருக்கமாகிறார்கள்.

குறிப்பாகக் கழிவிரக்கத்தை எதிர்பார்க்காமல் நியாயத்தை வேண்டி நிற்கும் மிருதுளா, ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் நம் மனதில் ஆழமாகப் பதிகிறார்கள்.
இதுதவிர மகளைக் கடிந்து கொண்டு உருமாறும் டி. அந்தோணி ஜானகி, ஆங்காங்கே சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டச் செய்யும் எழுத்தாளரின் மனைவியாக வரும் டாக்டர் எஸ்.கே. காயத்ரி, முன்முடிவுகளை நிராகரிக்கும் ஆட்டோ டிரைவர் முருகன் கோவிந்தசாமி, தனது செயலால் கோபத்தைத் தூண்டும் ரேகா குமணன் என அனைவரும் நடிப்பால் கவர்கிறார்கள். நெடுமொழியாக விரிந்த இறுதிக் காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மு.ராமசாமி.
ஃபேண்டஸி படம், மூன்று கதை, வெவ்வேறு உலகம் என்ற சவாலான பணி! வித்தியாசங்களை ஒளியுணர்வில், நிறமாற்றத்தை வைத்துச் சொல்லாமல், ஒவ்வொரு கதைகள் அடிக்கும் ஜானர் பல்டிகளுக்கு ஏற்ப காட்சி கோணங்களில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன்.
குறிப்பாக ரத்தத்தில் முகம் தெரிகிற ஷாட், ரிமோட் கார் ஏற்படுத்தும் ஹாரர் உணர்வு போன்றவை படத்தின் ஸ்டேஜிங்கின் தரத்தைக் கூட்டுகின்றன.
ஒளிப்பதிவாளரின் பணியை மேலும் மெருகேற்றும் விதமாகப் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமசந்திரன், சிக்கலான கதை சொல்லும் பாணியை இலகுவாக மாற்றியிருக்கிறார்.
ஓரிடத்தில் கண்ணாடி உடைய, மற்றொரு இடத்தில் உடைந்த உண்டியலை எடுப்பதாக வரும் ட்ரான்சிஷன் எஃபெக்ட்ஸ், இடையிடையே வருகிற அனிமேஷனோடு பொருந்திப் போகும் காட்சிகள், நீண்ட வசனத்துக்கு நடுவே இடைச்செருகலாக வைக்கப்பட்ட பிளாஷ்பேக்குகள் ஆகியவை திரைக்கதையைத் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.

இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் இசையில் சிந்தூரி விஷால் பாடிய கதையின் ஓட்டத்தோடு வருகிற ‘ரசிகா ரா ரா’ பாடலும், கேபர் வாசுகி பாடிய ட்ரிப்பி பாடலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையும் உணர்வுகளுக்கு ஏற்றவாறு கூத்துக்கட்டியிருக்கிறது.
யதார்த்த உலகில் நியாயமான நீதியைக் கொடுக்க முடியாத சூழலில், கற்பனை படைப்புலகில் அதை வழங்கும் சக்தி இருந்தும், அதைப் பயன்படுத்தாமல் அவர்களுக்குக் கெடுதல் செய்வது ஏன் என்ற கேள்வியை மேல்தட்டிலிருந்து கீழே பார்க்க விரும்பாத ஓர் எழுத்தாளனை வைத்து எழுப்பியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா.
ஓர் எழுத்தாளன் உருவாக்கிய உலகத்தில் அசமத்துவம் நிலவி வர, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தரப்பு நியாயங்களை அறச்சீற்றத்துடன் கேட்பதாகப் பின்னப்பட்ட திரைக்கதையை ஏ.ஆர்.ராகவேந்திரா – எம்.சீனிவாசன் கூட்டணி அற்புதமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஒரு தொடர்கதை பாணியில் ஒவ்வொரு கதையிலும் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ் யுக்தி சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. குறைந்து வரும் வாசிப்பு பழக்கம், அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை ஆகியவற்றைக் கதையின் தேவைக்கு உட்பட்டு தர்க்கமாக விவரித்த விதமும் சிறப்பு.
ஆட்டோ டிரைவர், நான்கு ரவுடிகளின் பெயர்கள் ஆகியவற்றை வைத்து பன்னெடுங்காலமாக தமிழ் சினிமா, அடித்தட்டு மக்கள் குறித்துக் கற்பித்திருக்கும் பொதுப்புத்தியைக் கிண்டல் செய்து யோசிக்க வைத்த இடம் அருமை.
“நூறு நபர்களில் இரண்டு நபர்கள்தான் ஜெயிக்கிறார்கள், நான் ஏன் அந்த இரண்டு நபர்களின் கதையைச் சொல்ல வேண்டும்” என்ற வாதத்தை எழுத்தாளர் வைக்க, “அந்த 2 சதவீதத்தில் இருக்கும் நபரைத்தானே உனது மகனுக்கு நீ உதாரணமாகக் கூறுகிறாய்” என்று வைக்கப்பட்ட நாகராஜ் கண்ணனின் வசனம் படத்தின் மொத்த சாரத்தையும் தாங்குகிறது.

மொத்தப் படமும் ‘நியாயமாய் நியாயம் படைத்திடு’ என்ற அறத்தைப் பேசினாலும், அதைப் பிரசாரமாகச் சொல்லாமல் தெளிவான திரைமொழியுடன் சொல்லியிருப்பது ப்ளஸ்!
என்னதான் ஃபேண்டஸியாக இருந்தாலும், அந்த சயின்ஸ் மிஸ் ட்விஸ்ட், அதீத செயற்கைத்தனம் என்பதோடு தேவையில்லாத ஆணியாக நீள்கிறது. இப்படி அறமெல்லாம் பேசிவிட்டு இறுதியில் ஒரு தொலைக்காட்சியை வைத்தது ஏன் என்பதும் புரியவில்லை. நன்றாகவே இருந்தாலும் அந்த ஆர்ட் அனிமேஷன் பாடல் கதைக்கு ஸ்பீட் பிரேக்கராக ஸ்தம்பிக்க வைக்கிறது.
தரமான தொழில்நுட்பம், புதுமையான திரைமொழி, தேவையான அரசியல் என்பதாக விரியும் இந்த ‘மாயக்கூத்’தை நிச்சயம் கொண்டாடலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…