dinamani2025-04-023dr7lrqgkanimozhi-in-parliament-PTI-edi

நமது நிருபர்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கனிமொழி, ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற உள்ளூர் அமைப்புகளிலும், மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? அப்படியிருந்தால் அதன் விவரங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்பட்ட ஆண்டு என்ன? நிர்வாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாக இருப்பதால், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசு ஒரு தேசிய கொள்கையைக் கொண்டு வர அல்லது தொடர்புடைய சட்டங்களை திருத்த முன்மொழிந்துள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் பி. எல். வர்மா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில்: ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் 5-ஆவது பிரிவின்படி ஒரு மாநில விவகாரமாகும். பெண்கள், பட்டியல் ஜாதியினர் (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) ஆகியோருக்கான இடஒதுக்கீடுகளைப் போலல்லாமல், இந்திய அரசமைப்பின் கீழ் ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவ மற்றும் பாகுபாடற்ற உரிமையை வழங்குகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest