
மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-ம் ஆண்டு பிறந்ததாக அவரது கிராமத்தின் அதிகாரிகள் பராமரித்து வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மிசோரமின் அதிக வயதுடைய பெண் எனக் கருதப்பட்ட ஃபாமியாங், கடந்த சில மாதங்களாக வயது முதிர்வினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 22) தனது வீட்டில் ஃபாமியாங் மரணமடைந்ததாக, கிராம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 23) நடைபெற்ற நிலையில், பங்குவாவிலுள்ள மயானத்தில் ஃபாமியாங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹெயினாவா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஃபாமியாங்-க்கு இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள் பிறந்தன. மேலும், அவருக்கு 51 பேரப் பிள்ளைகள், அவர்களுக்கு அடுத்தத் தலைமுறையில் 122 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் மற்றும் 22 எள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு மிசோரமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், வயது முதிர்விலும் வாக்களித்தற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஃபாமியாங்கை கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!