
நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.
ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் மீன்வளத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு நீா்நிலைகளைப் பொருத்தவரை, மீன் உற்பத்தியில் 143 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது.
உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு மீன் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கவும், தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும் மாநிலங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் சுமாா் 51,000 மீனவா்களே அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனா். இம்மாநிலத்தில் மீனவா்கள் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் இருக்கும். இங்கு எண்ணற்ற நீா்நிலைகள் உள்ளன. இவற்றை மீன்வளா்ப்புக்காக மேம்படுத்த வேண்டிய தேவை நிலவுகிறது. உள்நாட்டு நீா்வளங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றாா் ராஜீவ் ரஞ்சன் சிங்.