
பாமக-வில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே நிலவிவரும் உட்கட்சி மோதல்களுக்கு நடுவே, அன்புமணி மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு ராமதாஸ் கூறியிருந்தார்.
ஆனால், அதற்குப் பதிலளிக்காததால் கடந்த வாரம் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராமதாஸ் நீக்கினார்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 9-ம் தேதி அன்புமணி தரப்பு நடத்திய கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் என மூன்று பேருடைய பதவிக் காலத்தையும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதனடிப்படையில், அன்புமணி தரப்பு பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வதாகவும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் படியும், கட்சியின் விதிகளின் படியும் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கதல்ல எனவும் தெரிவித்தார்.
மறுபக்கம், ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பா.ம.க இணை பொதுச் செயலாளர் அருள், “தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி வழக்குரைஞர் பாலு பொய்யான, சட்ட விதிகளுக்கு முரண்பட்ட தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ராமதாஸ்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தில் மாற்றிக் கொடுத்துள்ளார்கள். அதன் காரணமாகவே தேர்தல் ஆணையத்தின் கடிதம் அந்த முகவரிக்கு சென்றுள்ளது” என்று நேற்று (செப்டம்பர் 15) கூறியிருக்கிறார்.
இவற்றுக்கு மத்தியில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, “ஜூலை 30-ம் தேதி தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் வெளியிட்டது. அதில், பீகார், தமிழ்நாடு, புதுச்சேரியில் பாமக-வுக்கு மாம்பழம் சின்னம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தின் முகவரி, பாமக தலைவர், எண் 10, திலக் தெரு, தி நகர், சென்னை 17 என்று இருக்கு. இந்த முகவரி மாற்றம் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தை வெளியிட்டது.

ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரம் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலைப் பதிவு செய்கிறோம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
அன்புமணியின் பதவிக் காலம் 28-05-2025ல் முடிந்துவிட்டது. தலைவர் பதவியில் இல்லாதவர் எப்படி பொதுக்குழுவைக் கூட்ட முடியும்.
மேலும், பாமக அமைப்பு விதி 13-ல், நிறுவனர் ராமதாஸின் நிர்வாகக் குழு, பொதுக் குழு, செயற்குழு எதுவும் செயல்படக் கூடாது என்று இருக்கிறது.
எனவே மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக் குழு செல்லாது. 29-05-2025 நிர்வாகக் குழுவால் தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகக் குழுவின் முடிவை செயற்குழுவும், பொதுக்குழுவும் அங்கீரிக்கரித்தது.

தலைவர் என்று சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது மோசடி. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் ராமதாஸுக்கு வரவேண்டியது. முகவரியை மாற்றிக் கொடுத்துவிட்டு அந்தக் கடிதத்தை வைத்து வழக்கறிஞர் பாலு ஏமாற்றுகிறார்.
இனி பாமக தலைமை அலுவலக முகவரி தைலாபுரம் தோட்டம்தான். தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளப்படும். விரைவில் கடிதம் வரும்.
பாமக-வில் மீண்டும் தொடரவேண்டும் எல்லாம் ராமதாஸுடன் சேர்ந்து பயணிப்பதுதான் நல்லது. பிளவுபடுத்தி கட்சி எங்களிடம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் நீடிக்காது” என்று கூறினார்.