விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 100 மி.மி. மழைப் பதிவாகியுள்ளது.
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லையென்றாலும் புழுக்கம் காணப்பட்டது.
இந்த நிலையில் இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இடையில் சிறிது நேரம் மழை விட்ட நிலையில், மீண்டும் இரவு 9.30 மணிக்கும் மேல் பெய்யத் தொடங்கியது. இந்த மழையின் காரணமாக விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி. மீட்டரில்):
முகையூர் -100 மி.மீ., கெடார – 43, விழுப்புரம் – 38, அரசூர் – 37, சூரப்பட்டு – 36, திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், நேமூர் தலா – 35, மரக்காணம் – 30, கோலியனூர் – 29, வல்லம் – 25, மணம்பூண்டி – 23, முண்டியம்பாக்கம் -15.20, திண்டிவனம் – 14.30, வானூர் -13, கஞ்சனூர் -10, செஞ்சி -9.50, அனந்தபுரம் -9, செம்மேடு -7.40, அவலூர்பேட்டை -6, வளத்த – 4 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 554.50 மி.மீ. மழையும், சராசரியாக 26.40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.