
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் 9 நாட்களாக இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ‘முதலமைச்சரையும் அவர் குடும்பத்தையுமே திட்டுறீங்களா…’ என கடும் கோபத்தோடு பேசியிருக்கிறார்.
நேற்று போராட்டத்தின் எட்டாம் நாள். தூய்மைப் பணியாளர்களை ஒன்றிணைத்து உழைப்போர் உரிமை இயக்கம் என்கிற அமைப்புதான் போராடி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேற்று மதியம் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருந்தனர்.

அதிருப்தி
அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இந்த இரவு நேர பேச்சுவார்த்தையிலும் கலந்துகொண்டிருந்தனர். 9:15 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தை நள்ளிரவை எட்ட இரவு 11:50 மணியளவில் போராட்டக் குழுவினர் அதிருப்தியோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினர். ‘முதல்ல அவங்க பேசுவாங்க…அப்புறம் நாங்க பேசுறோம்.’ என விரக்தியோடு கூறினர்.
போராட்டக் குழுவினர் வெளியேறியவுடன் அமைச்சர் சேகர் பாபு, பிரியா மற்றும் அதிகாரிகள் தரப்பு மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினர். மீண்டும் நள்ளிரவு 1:30 மணியளவில் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அடுத்த 10 நிமிடத்திலேயே அவர்கள் வெளியேறினர். நள்ளிரவு 1:50 மணியளவில் அமைச்சர் சேகர் பாபு, பிரியா ஆகியோர் ரிப்பன் மாளிகையை விட்டு வெளியே வந்தனர். வாசலில் பத்திரிகையாளர்கள் காத்திருக்க சேகர் பாபுவின் முகமே கடுகடுவென இருந்தது.

மைக்குகள் நீட்டப்பட ‘திமுகதானே 2021 இல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்கிறோம் என உறுதிக் கொடுத்தது?’ என ஒரு செய்தியாளர் கேட்க, ‘நாங்க எங்க கொடுத்தோம். அதை எடுங்க. காமிங்க…’ என கேள்வி கேட்ட செய்தியாளரின் மீது ஆவேசமாக பாய்ந்தார். 3 நிமிடங்கள் மட்டுமே அந்த செய்தியாளர் சந்திப்பு நீடித்திருந்தது. நாளை காலை மீண்டும் பேசப் போகிறோம் என கூறிவிட்டு அதே கடுகடுப்போடே சேகர் பாபு காரை கிளப்பினார்.
நள்ளிரவில் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? சேகர் பாபு ஏன் கடுப்பானார்? என விசாரித்தோம். பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலிருந்தே இருதரப்பினரும் தங்களின் பாய்ண்ட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர். சேகர் பாபு பலவிதமாக பேசிப்பார்த்தும் போராட்டக்குழு மசியவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பான சேகர்பாபு, ‘கூட்டமா உட்காந்துட்டு முதலமைச்சரையே திட்டுறீங்க. முதலமைச்சர் குடும்பத்துக்கே சாபம் விடுறீங்க. நாங்க நினைச்சா முதல் நாளே கூட்டத்தை கலைச்சிருப்போம். அதிமுக கவர்மெண்ட்டா இருந்தா வேற மாதிரி பண்ணிருப்பாங்க. நாங்கதான் ஜனநாயகப்பூர்வமா நடந்துக்குறோம். நியாயமா இருக்கோம். அதனால அரசோட இணக்கமா போங்க.’ எனக் கூறியிருக்கிறார்

உடனிருந்த அதிகாரிகளும், ‘போராடும் பெண்களை மாநாகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கழிவறையை பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். நாங்கள் நினைத்திருந்தால் கேட்டை இழுத்து மூடியிருப்போம்.’ என எகிறும் தொனியிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுத்திருக்கின்றனர். போராட்டக்குழு எதற்கும் பின்வாங்கவில்லை. ஒரு கட்டத்தில், ‘நான் ஐயப்ப பக்தன். ஆட்டோலாம் ஓட்டி சாதாரண நிலைமைல இருந்துதான் இங்க வந்துருக்கேன். நானும் ஜனங்களோட ஜனங்களதான் இருக்கேன். எல்லாம் நம்ம ஜனம்தான். ஜனங்களோட கஷ்டம் என்னன்னு எனக்கும் தெரியும்.’ என செண்டிமெண்டாகவும் பேசிப் பார்த்திருக்கிறார்.
ஆனால், போராட்டக் குழு தங்களின் கோரிக்கைகளில் உறுதியாக நின்றிருக்கிறது. எவ்வளவோ முயன்றும் காரியத்தை சாதிக்க முடியவில்லை என்பதில்தான் சேகர்பாபு கடுப்பாகியிருக்கிறார். ‘நாங்கள் பேசிவிட்டு உங்களுக்கு கால் செய்கிறோம்…’ என போராட்டக் குழுவினரை வெளியில் அனுப்பியிருக்கின்றனர். 11:50 மணிக்கு இந்த சம்பவம் நடக்கிறது. நள்ளிரவு 1:30 மணி வரைக்கும் அமைச்சர் தரப்பிலிருந்து அழைப்பு வராததால் போராட்டக் குழுவினர் தாமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அறைக்கு சென்றிருக்கின்றனர்.

இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், ‘நாளை பேசிக்கொள்ளலாம்..’ எனக் கூறிவிட்டு பேச்சுவார்த்தையை முடித்திருக்கின்றனர். பேசி ஒரு முடிவை எட்டிவிடலாம் என்ற மனநிலையில் சேகர் பாபு வந்திருந்தார். ஆனால், எவ்வளவோ பேசிப் பார்த்தும் போராட்டக் குழு தங்களின் நிலையிலிருந்து இறங்கி வர தயாராக இல்லை. அந்தக் கடுப்பில்தான் வெளியே வந்து செய்தியாளர்களிடமும் பாய்ந்திருக்கிறார் என்கிறது ஒரு தரப்பு.
பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்த போராட்டக் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் குமாரசாமியிடம் பேசினேன். ‘இப்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. நாளை மீண்டும் பேசலாம் என சொல்லியிருக்கிறார்கள். எங்கள் மக்களுடன் கலந்து பேசிவிட்டு நாளைய மீட்டிங்கிலும் எங்களின் கோரிக்கைகளை வலுவாக முன்னெடுத்து வைப்போம்.’ என்றார்.