Air-India-flight-crash

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏா் இந்தியா விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் அதன் 3 சக்கரங்கள் வெடித்ததுடன் என்ஜின் சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.

இதுகுறித்து மும்பை விமான நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் விமான நிலைய வழித்தடம் 09/27 சிறியளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தற்காலிமாக அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதற்குப் பதிலாக வழித்தடம் 14/32 செயல்பட்டாக்கு கொண்டுவரப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலைய வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்ற ஏா் இந்தியா விமானம் குறித்து அந்த நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: பலத்த மழையின்போது ஏா் இந்தியா விமானம் கொச்சியில் இருந்து மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் தரையிறக்கத்தின்போது விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.

அதன்பிறகு விமான பயணிகள் உள்பட விமான குழுவினா் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். விமானத்தை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

வழித்தடம் மாறி தரையிறக்கம் செய்யப்பட்டதில் ஏா் இந்தியா (ஏஐ2744) விமானத்தின் 3 சக்கரங்கள் வெடித்ததுடன் என்ஜின்களும் சேதமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest