122669192

மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசலில் எம்எல்ஏ-க்கள் நின்று கொண்டிருந்தனர். அந்நேரம் பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் படல்கர் காரில் வந்து இறங்கினார்.

அவர் தனது காரை திறந்த போது கார் கதவு அங்கு நின்று கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் காலில் பட்டது.

ஜிதேந்திர அவாத்

இதனால் இரண்டு எம்எல்ஏ-க்களும் சம்பவ இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு நின்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தையடுத்து மறுநாள் இரண்டு பேரும் சட்டமன்றத்திற்கு வரும்போது தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.

சட்டமன்ற வளாகத்தில் கோபிசந்த் ஆதரவாளர் ரிஷிகேஷுக்கும் ஜிதேந்திர அவாட் ஆதரவாளர் நிதின் தேஷ்முக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் இவரது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். சட்டமன்ற காவலர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை பிரித்துவிட்டனர். சட்டமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் சட்டமன்றத்திலேயே எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இது குறித்து ஜிதேந்திர அவாட் கூறுகையில், ”என்னை கொலை செய்யும் நோக்கத்தில் குண்டர்களை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு அதிகார ஆணவம் அதிகம். சட்டமன்ற வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், நாங்கள் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். எனது தாயார் மற்றும் சகோதரியை திட்டினார்கள். என்னையும் தேவையில்லாத வார்த்தைகளை பேசவைத்தார்கள். நாய்களைப்பற்றியும், பன்றிகளைப்பற்றியும் எழுதி என்ன ஆகப்போகிறது. சிறிது காற்று வாங்கலாம் என்று சட்டமன்ற வளாகத்திற்கு வெளியில் வந்து நின்றேன். என்னை கொலை செய்ய வருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்”என்று கோபத்தில் பேசினார்.

தேவேந்திர பட்னாவிஸ்

இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் நடந்த வளாகம் சபாநாயகர் மற்றும் சட்டமேலவை தலைவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நான் அவர்களை வலியுறுத்தியுள்ளேன். இதுபோன்ற நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளமுடியாது” என்றார்.

இது குறித்து பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ”குண்டர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்கு பாஸ் கொடுத்தது யார்?. மாநிலத்தின் நிலைமை இதுதான் என்றால், சட்டமன்றம் இருப்பதன் பயன் என்ன?” என்று கேட்டார்.

இது குறித்து பேசிய சரத்பவார் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவார், ”ஆளும் கட்சி எம்எல்ஏ. எங்களது கட்சி எம்எல்ஏ ஜிதேந்திர அவாத்தை சட்டமன்ற வளாகத்தில் மிரட்டுகிறார். ஆனால் ஜிதேந்திர அவாத் தனது ஆதரவாளர்களை பொறுமை காக்கும்படி கூறினார். இப்போது ஜிதேந்திர அவாத்தை அடிக்கும் நோக்கில் வெளியில் இருந்து குண்டர்களை பா.ஜ.க எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்குள் அழைத்து வந்துள்ளார்”என்றார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சட்டமன்றத்தில் ஜிதேந்திர அவாட் மிகவும் கோபமாக பேசினார். உடனே இது குறித்து தகவல் கொடுக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் கோபிசந்த் சட்டமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

கோபிசந்த்

இது குறித்து ஜிதேந்திரா அவாத் நேரடியாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.கோபிசந்த்திற்கு அமைச்சர் சந்திரகாந்த் பவன்குலே அழைப்பு விடுத்தார்.

அவரிடம் கோபிசந்த் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெளியில் வந்த கோபிசந்த் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

சட்டமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறிவிட்டு உடனே சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டார். மோதலில் ஈடுபட்ட இரு கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்களையும் சட்டமன்ற காவலர்கள் பிடித்துச்சென்று வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest