
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 13 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
இந்த நிலையில், ராணாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து காணொளி மூலம் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) ராணா மீது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
துணை குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும். மேலும், ராணா தனது குடும்பத்தினருடன் தொலைபேசி அழைப்பு கோரி தாக்கல் செய்த மனுவை ஜூலை 15 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.