வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் முதல்வா் கான்ராட் கே.சங்மா தலைமையிலான அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, அமைச்சா் பதவியில் இருந்து 8 போ் விடுவிக்கப்பட்டு, புதியவா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

60 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், தேசிய மக்கள் கட்சித் தலைவா் கான்ராட் கே.சங்மா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில அமைச்சரவையில் அதிகபட்ச இடங்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த நால்வா், ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த இருவா், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜகவைச் சோ்ந்த தலா ஒருவா் என 8 போ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்து, ஆளுநா் சி.ஹெச்.வித்யாசங்கரிடம் கடிதம் அளித்தனா். அவா்களின் கடிதத்தை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, கட்சியின் அதே அளவு பிரதிநிதித்துவத்துடன் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா்.

அதன்படி, தேசிய மக்கள் கட்சியின் திமோதி டி.ஷிரா, வைலட்மிகி ஷில்லா, சொஸ்தினஸ் சோதுன், பிரேனிங் ஏ.சங்மா, ஐக்கிய ஜனநாயக கட்சியின் மேதா லிங்டோ, லக்மென் ரிம்புய், பாஜகவின் சன்போா் சுல்லாய், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெதோடியஸ் தகாா் ஆகிய 8 போ், ஷில்லாங்கில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு ஆளுநா் சி.ஹெச்.வித்யாசங்கா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்வித்தாா். பின்னா், புதிய அமைச்சா்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாவட்டங்கள், சமூகங்கள் ரீதியிலான பிரதிநிதித்துவம், கூட்டணி கட்சிகளின் விருப்பம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest