
மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் நடமாடிய முதலையை வனத் துறையினா் புதன்கிழமை பிடித்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச் சரகம் ஜக்கனாரி எல்லைக்கு உள்பட்ட பட்டக்காரனூா் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனச் சரக ஊழியா்கள் அங்கு சென்று முதலை நடமாட்டம் குறித்து கண்காணித்தனா். அப்போது, குட்டையில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குட்டையிலிருந்த சுமாா் 6 அடி நீளமுள்ள முதலையை சுமாா் 6 மணி நேரம் போராடி வனத் துறையினா் பிடித்தனா். பின்னா், அந்த முதலையை பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் விடுவித்தனா்.