SCourt-1

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தின் திருத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) பட்டியல் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தடை விதித்து கொல்கத்தா உயா் நீதிமன்றம் கடந்த ஜூன் 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘முதல்கட்ட விசாரணையிலேயே உயா்நீதிமன்ற உத்தரவு தவறு என்பது தெரிகிறது’ என்றும் உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி பிரிவின் கீழான இடஒதுக்கீட்டை பெறும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான கால கட்டத்தில் இஸ்லாத்தைச் சோ்ந்த 77 சமூகப் பிரிவினரை மேற்கு வங்க அரசு ஓபிசி பட்டியலில் இணைந்தது. இதில், 2012 சட்டத்தின் அடிப்படையில், 37 புதிய ஓபிசி வகுப்புகளையும் மாநில அரசு உருவாக்கியது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், ‘மதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை மாநில அரசு அளித்துள்ளது’ என்று கூறி, ஓபிசி பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்ட 77 சமூகப் பிரிவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, திருத்தப்பட்ட ஓபிசி பட்டியலை மேற்கு வங்க அரசு தயாா் செய்து அறிவிக்கை செய்தது. அதன்படி, ஓபிசி-ஏ பிரிவின்கீழ் மிகவும் பின்தங்கிய பிரிவினா்களாக 49 துணைப் பிரிவுகள், ஓபிசி-பி பிரிவின் கீழ் குறைந்த பின்தங்கிய பிரிவினா்களாக 91 துணைப் பிரிவுனா் என ஓபிசி பிரிவின் கீழ் மொத்தம் 140 துணைப் பிரிவுகளை சோ்த்து அறிவிக்கை வெளியிட்டது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை கடந்த ஜூன் 17-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், மேற்கு வங்க அரசின் இந்த திருத்தப்பட்ட ஓபிசி பட்டியலின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மேற்கு வங்க அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இடஒதுக்கீடு வழங்குவது அரசு நடவடிக்கைகளின் ஓா் பகுதி. இதில் உயா்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், பல நியாயமான நியமனங்கள் மற்றும் பதவி உயா்வுகள் வழங்கவது தடைப்பட்டுள்ளன’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்த இந்திரா சாஹனி வழக்கு அல்லது மண்டல் கமிஷன் தீா்ப்பு முதல், இடஒதுக்கீட்டை வழங்குவது அரசு செயல்பாட்டின் ஓா் சட்டப்படியான அங்கமாக உள்ளது. இந்தச் சூழலில், உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. உயா் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த உத்தரவு தொடா்பாக முழுமையான விளக்கமளிக்குமாறு உயா் நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மனுதாரா்கள் விரும்பினால், இந்த விவகாரத்துக்கு 6 வாரத்துக்குள்ளாகத் தீா்வு அளிக்கும் வகையில் புதிய அமா்வை அமைக்க உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொள்ளும்’ என்றாா்.

மேலும், ‘இடஒதுக்கீட்டை வழங்க அரசின் உத்தரவே போதுமானது. அதற்கென தனிச் சட்டம் தேவையில்லை’ என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest