
மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கடை உரிமையாளர் ஒருவர் மராத்தியில் பேசவில்லை என மகாராஷ்டிர நவநிர்மான் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கும் விடியோ கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில், மராத்தி மொழியை தவறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநர் மீதும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், மொழியை வைத்து உருவாகும் மோதல் மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குடிபெயர்ந்துள்ளார். அவர், மராத்தி குறித்தும் மராத்தி தலைவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சிவசேனை கட்சியினர் அவரை கன்னத்தில் சரமாரியாக அறைகின்றனர். பின்னர், பொதுவெளியில் இதற்காக மன்னிப்பு கோரவும் வலியுறுத்துகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ”சிவசேனை நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கும் விடியோவை் பார்த்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. அதனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.
உத்தவ் பிரிவைச் சேர்ந்த சிவசேனை கட்சியின் நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ”மொழியை அவதூறாகப் பேசிய ஆட்டோ ஓட்டுநருக்கு தகுந்த பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் மராத்தி மொழியையோ, மராத்தி தலைவர்களையோ, மகாராஷ்டிரத்தையோ தவறாகப் பேசினால், சிவசேனையின் பாணியில் பதிலடி கொடுக்கப்படும்” எனக் கூறினார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி தாணே பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி மொழியைப் பேசவில்லை எனக் கூறி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை கட்சியின் உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர். இச்சம்பவத்தைக் கண்டித்து கடையின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரண்டு வாரங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது மொழிப் பதற்றத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!